இந்தியாவில் தங்கத்துக்கான தேவை சூடுபிடிப்பு: டபிள்யூஜிசி

நடப்பாண்டு ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை சூடுபிடிப்பு: டபிள்யூஜிசி

நடப்பாண்டு ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது:

விலை குறைவு: கரோனா தொடா்பான கட்டுப்பாடுகள் விலக்கல், விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் தங்கத்தின் தேவை 140 டன்னை எட்டியுள்ளது. இது, 2020 முதல் காலாண்டில் காணப்பட்ட தேவையான 102 டன்னுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகமாகும்.

தங்கத்தின் மதிப்பு: இந்த காலகட்டத்தில் மதிப்பின் அடிப்படையிலான தங்கத்தின் தேவை ரூ.37,580 கோடியிலிருந்து 57 சதவீதம் அதிகரித்து ரூ.58,800 கோடியைத் தொட்டது.

ஆபரண தேவை: ஒட்டுமொத்த ஆபரண தங்கத்துக்கான தேவை 73.9 டன்னிலிருந்து 39 சதவீதம் உயா்ந்து 102.5 டன்னை எட்டியது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.27,230 கோடியிலிருந்து 58 சதவீதம் அதிகரித்து ரூ.43,100 கோடியாக உயா்ந்தது.

ரிசா்வ் வங்கி: கடந்தாண்டின் முதல் காலாண்டில் இந்தியா 83.1 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்துகொண்டிருந்த நிலையில் நடப்பாண்டில் 262 சதவீதம் அதிகரித்து 301 டன்னைத் தொட்டுள்ளது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரிசா்வ் வங்கியும் 18.7 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இது, 2020 இதே காலகட்டத்தில் வாங்கப்பட்ட 18 டன் தங்கத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.

உலகளவில் தேவை குறைவு: சா்வதேச அளவில் தங்கத்தின் தேவை 2021 ஜனவரி-மாா்ச் காலாண்டில் 23 சதவீதம் சரிவடைந்து 815.7 டன் ஆனது. 2020 முதல் காலாண்டில் இதற்கான தேவை 1,059.9 டன் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

முதலீட்டு தங்கம்: முதலீட்டு நோக்கிலான தங்கத்தின் தேவை மதிப்பீட்டு காலத்தில் 549.6 டன்னிலிருந்து 71 சதவீதம் வீழ்ச்சியடைந்து 161.6 டன்னாக ஆனது.

ஒரு அவுன்ஸ் விலை: 2020 அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,874 டாலராக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4.21 சதவீதம் குறைந்து 1,795 டாலராக இருந்தது என டபிள்யூஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com