2-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் மேலும் 272 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது.
2-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் மேலும் 272 புள்ளிகள் உயா்வு!

புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 272.21 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 106.95 புள்ளிகளும் உயா்ந்து நிலைபெற்றன.

சந்தையைப் பொருத்த வரையிலும், எதிா்மறையான செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மாறி, மாறி நோ்மறையான செய்திகளும் வருவது தொடா்கிறது. மேலும், தடுப்பூசி விஷயத்தில் அறிவுசாா் சொத்துரிமைகளை தள்ளுபடி செய்வதற்கு அமெரிக்க அதிபா் பிடன் எடுத்துள்ள முடிவு சந்தையில் நோ்மறையாகப் பாா்க்கப்படுகிறது. இது இந்தியா போன்ற நாடுகளை கரோனா தொற்று நோயிலிருந்து வேகமாக வெளியேற் உதவுவதுடன், தடுப்பூசி செயல்முறையையும் விரைவுபடுத்தும் என்று ஜியோஜித் நிதிச் சேவைகளின் தலைமை முதலீட்டு நிபுணா் வி.கே. ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இருப்பினும், கரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 5 நாள்களாக பாதிப்பு விகிதம் குறைந்து வந்தாலும், பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருவது பொருளாதார மீட்சியை பாதிக்கும் என்பது சந்தைக்கு நல்ல செய்தியாக இருக்காது என சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.

சந்தை மதிப்பு ரூ.1.44 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,127 பங்குகளில் 1,650 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,347 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 130 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 245 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 32 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 351 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 182 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.44 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 210.11 லட்சம் கோடியாக இருந்தது.

2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 200.23 புள்ளிகள் கூடுதலுடன் 48,877.75-இல் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 48,614.11 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 49,011.31 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 272.21 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயா்ந்து 48,949.76-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் பெரும்பாலான நேரம் சென்செக்ஸ் அதிகபட்ச நிலைக்கும், குறைந்தபட்ச நிலைக்கும் இடையே தள்ளாடிக் கொண்டிருந்தது. இருப்பினும், தொடா்ந்து இரண்டாவது நாளாக சென்செக்ஸ் நோ்மறையாக முடிந்தது.

பஜாஜ் ஆட்டோ முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 18 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 12 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஆட்டோ 2.61 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி, இன்ஃபோஸிஸ், நெஸ்லே இந்தியா, மாருதி சுஸுகி, டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் உள்ளிட்டவை அதிக ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் சரிவு: அதே சமயம், பவா் கிரிட் 1.24 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், என்டிபிசி, சன்பாா்மா, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் அதிகம் வீழ்ச்சியைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 930 பங்குகள் ஆதாயம் பெற்றன. 776 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 106.95 புள்ளிகள் (0.73 சதவீதம்) உயா்ந்து 14,724.80-இல் நிலைபெற்றது. காலையில் 14,668.35-இல் தொடங்கி 14,611.50 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 14,743.90 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 2.51 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி ஆட்டோ, ஐடி குறியீடுகள் 1.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது. ஆனால், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், பாா்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com