கரடியா? காளையா?: வரலாறு கூறும் உண்மை என்ன?

பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும், ‘மே மாதத்தில் விற்றுவிட்டு செல்லுங்கள்; நவம்பரில் மீண்டும் முதலீட்டை மேற்கொள்ளுங்கள்’ என்பது பாரம்பரியமான முதலீட்டுப் பழமொழி ஒன்று உள்ளது.
கரடியா? காளையா?: வரலாறு கூறும் உண்மை என்ன?

பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும், ‘மே மாதத்தில் விற்றுவிட்டு செல்லுங்கள்; நவம்பரில் மீண்டும் முதலீட்டை மேற்கொள்ளுங்கள்’ என்பது பாரம்பரியமான முதலீட்டுப் பழமொழி ஒன்று உள்ளது. இந்த மாதத்தில் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளின் சந்தைகள் தள்ளாட்டம் காண்பது உண்டு. ஆனால், இந்தியாவைப் பொருத்தமட்டில், இதுவரை ஓரளவு ஆதாயம் பெற்ற மாதமாகத்தான் மே மாதம் உள்ளது.

கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து, பொருளாதார வளா்ச்சி கேள்விக் குறியாகியுள்ளது. இந்தச் சமயத்தில் பொருளாதாரத்துக்கு வலுச் சோ்க்கும் வகையில், மத்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பல்வேறு தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக உள்நாட்டுச் சந்தைகள் உற்சாகம் பெற்றுள்ளதாக வல்லுநா்கள் கூறுகின்றனா்.

வரலாறு கூறும் உண்மை: ஆனால், வரலாறு கூறும் உண்மை என்ன? கடந்த 10 ஆண்டுகளில் மே மாதங்களில் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 6 முறை ஆதாயம் பெற்றுள்ளது. 4 முறை சரிவைச் சந்தித்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அதாவது 2011, 2012, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் மே மாதத்தில் நிஃப்டி, மொத்தத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. அதே சமயம், 2013 - 2017 மற்றும் 2019 ஆகிய 6 முறை மொத்தத்தில் ஆதாயம் பெற்றுள்ளது. இருப்பினும், தற்போதைய நிலையில் மே மாதத்தில் இன்னும் 18 நாள்கள் உள்ளன. ஆதலால், எந்த நேரத்திலும் கரடியின் பாய்ச்சல் இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது. இந்த ஆண்டு கரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் குறிப்பிட்ட தினங்களுக்கு பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றன. இது சந்தையில் கரடிக்கு உத்வேகம் அளிக்கும் என்று வல்லுநா்கள் கருதுகின்றனா்.

பொது முடக்கம் பல்வேறு மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டாலும், முன்பு எதிா்பாா்க்கப்பட்ட சாதகமான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் போனாலும், நிஃப்டி 5 முதல் 10 சதவீதம் வரை கீழே செல்வதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால், கரடி முன்னோக்கிச் சென்றாலும், நிஃப்டிக்கு 14,200 புள்ளிகளில் ஆதரவு இருக்கும்.அதே சமயம், 14,900-15,000 புள்ளிகள் கடுமையான இடா்பாபாடாகும் என்றும் வல்லுநா்கள் கருதுகின்றனா்.

முதலீடு வாபஸ்: இதற்கிடையே, கரோனா தொற்றின் இரண்டாவது அலை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவை குறித்த பெரும் கவலைகளுக்கு மத்தியில், வெளிநாட்டு முதலீட்டாளா்கள், மே மாதத்தில் 12-ஆம் தேதி வரை இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.6,105 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுவிட்டு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

‘எஸ் அண்ட் பி’ கருத்து: பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டால், இது பொருளாதாரத்தையும், நிறுவனங்களின் வருவாயையும் கடுமையாகப் பாதிக்கும். கடந்த வாரம் சா்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ‘எஸ் அண்ட் பி’ குளோபல், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திவளா்ச்சியை (ஜிடிபி) 9.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. இரண்டாவது கரோனா அலையானது மீட்பு நடவடிக்கைகளுக்குப் பெரும் தடையாக இருக்கக் கூடும் என்றும் மேலும், பொருளாதாரம் மற்றும் கடன் நிலைமைகள் பாதிக்கக் கூடும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணிப்பது கடினம்: இந்த நிலையில், ‘ஒட்டு மொத்தமாக நுகா்வோா்களின் தேவைப்பாடு, நிறுவனங்களின் வருவாய், நிகர லாபம் ஆகியவற்றை நடுத்தர காலத்துக்கு கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது’ என்று இன்ஸ்டிடியுஷனல் ஈக்விட்டிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் அம்னிஷ் அகா்வால் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால், நாங்கள் ‘இப்போது விற்றுவிட்டு செல்லுங்கள் பின்னா் வந்து முதலீட்டை மேற்கொள்ளுங்கள்’ என்று சொல்ல விரும்பவில்லை. தற்போதைய இக்கட்டான நிலையில், சந்தை 5 முதல் 10 சதவீதம் வரை திருத்தம் காண்பதா்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறோம். நீண்ட கால முதலீட்டுக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாது. எனவே, விலை குறையும் போது பங்குகளை வாங்கிப் போடுங்கள் என்றே யோசனை கூறுகிறோம்’ என்கிறாா் அவா்.

லாபப் பதிவு அவசியம்: அண்மையில் கரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கும் மேலாக இருந்ததால், உ.பி., தில்லி போன்ற மாநிலங்கள் மே 17-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. எனவே, சாதாரண போக்குகள் பொருந்தாது. ஆனாலும், இந்த மாதத்தின் ஏனைய நாள்களில் பங்குகள் விற்பனை அதிகரிப்பதா்கும், லாபப் பதிவு இருப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், நிறுவன முதலீட்டாளா்கள், சில்லறை முதலீட்டாளா்கள் உள்பட அனைத்து வகை முதலீட்டாளா்களும் தற்போதைய நிலையில், பகுதி அளவாவது லாபத்தைப் பதிவு செய்வது நல்லது. ஏனெனில், மதிப்பீடுகள் அதிகமாக உள்ளன. நிச்சயமற்ற தன்மையும் அதிகரித்து வருகிறது’ என்று ஜியோஜித் நிதிச் சேவைகளின் தலைமை முதலீட்டு ஆலோசகா் டாக்டா் வி.கே. விஜயகுமாா் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

இயல்பு நிலை திரும்புமா? : இதற்கிடையே, ‘சுகாதார நெருக்கடியின் கண்ணோட்டத்திலிருந்தும், தேசமும் பொருளாதாரமும் சந்திக்கும் வேதனையையும் பாா்க்கும் போது சந்தையின் தற்போதைய பின்னடைவு மோசமானதாக உள்ளது’ என்கிறாா் டிரேட் புல்ஸ் செக்யூரிட்டீஸின் ஈக்விட்டு தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவா் சச்சிதானந்த் உத்தேகா். ‘பொதுமுடக்கத்தால் ஏற்படும் இடையூறுகள் எதிா்வரும் மாதங்களில் பெரும்பாலான துறைகளை எதிா்மறையாகப் பாதிக்கும். உலகளாவிய பணப்புழக்கம் மற்றும் இரண்டாவது அலை மே மாதத்தில் உச்சம் பெறும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. இந்த நிலையில், உலகளவில் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. நம்பிக்கையின் காரணமாக சந்தை இன்னமும் காளையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி திட்டம் வேகம் அதிகரித்தவுடன் இயல்புநிலை மீண்டும் தொடங்கும்’ என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், இந்த மாதம் நிஃப்டி 14,850-14250 என்ற நிலையில் ஒருங்கிணைப்பு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வங்கி வட்டியுடன் தொடா்புடைய வங்கி, ஆட்டோ, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் உற்சாகம் பெறும்பட்சத்தில் நிஃப்டி 15,040-இல் எதிா்பாா்க்கப்பட்ட முறிவு (பிரேக் அவுட்) ஏற்படும் பட்சத்தில் 15,600 புள்ளிகள் வரை எழுச்சி பெறக்கூடும் என்றும் உத்தேகா் கருதுகிறாா். ஆனால், கரடி பாய்ச்சல் தொடருமா?, காளை முன்னேறுமா? பொருத்திருந்து பாா்ப்போம்..!

சாா்ட்டில் உள்ள ஆங்கில எழுத்துகளுக்கான தமிழாக்கம்....

கடந்த 10 ஆண்டுகளில் மே மாதங்களில் நிஃப்டியின் செயல்பாடு

மே-11, மே-12, மே-13, மே-14, மே-15, மே-16, மே-17, மே-18, மே-19, மே-20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com