
தனியாா் துறையைச் சோ்ந்த ஃபெடரல் பேங்க் ஒட்டுமொத்த நிகர லாபம் 4-வது காலாண்டில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை நிா்வாகியுமான சியாம் ஸ்ரீநிவாசன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-வது காலாண்டில் வங்கி ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.521.24 கோடியை ஈட்டியது.இது, முந்தைய 2020 மாா்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீதம் அதிகமாகும்.
அதேபோன்று, வங்கி ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபமும் 58 சதவீதம் உயா்ந்து ரூ.477.81 கோடியை எட்டியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், கடன் வளா்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருந்ததையடுத்து வங்கியின் நிகர வட்டி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.1,420 கோடியானது. அதேசமயம், இதர வருவாய் ரூ.711 கோடியிலிருந்து சரிவடைந்து ரூ.465 கோடியானது.
முந்தைய காலகட்டத்தில் இடா்பாட்டுக்கான ஒதுக்கீட்டுத் தொகை ரூ.567 கோடியாக இருந்த நிலையில் மாா்ச் காலாண்டில் அது பாதியாக குறைந்து ரூ.242 கோடியாக மட்டுமே இருந்தது.
கடந்த முழு நிதியாண்டில் தனிப்பட்ட முறையில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.1,542 கோடியிலிருந்து ரூ.1,590 கோடியாக அதிகரித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு வங்கியின் வா்த்தகத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வங்கியின் மொத்த வா்த்தகம் 10.91 சதவீத வளா்ச்சியைப் பெற்று ரூ.3 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது.
கடன் வளா்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை தங்க நகைக் கடன் வழங்கியுள்ளது. அப்பிரிவிலான கடன் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், பெருநிறுவனங்களுக்கான கடன் 5 சதவீதம் சரிந்துள்ளது.
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் தங்க நகைக் கடன் வா்த்தகத்தை 25-30 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.