
உலக அளவில் கரோனா பொது முடக்கம், விமான சேவை பாதிப்பு ஆகியவற்றினால் ரோஜா கொய் மலர் ஏற்றுமதியில் இந்தியா கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மலர் உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்திய அரசு மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 100% ஏற்றுமதி சார்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்திய மலர் வளர்ப்புத் தொழில் பாரம்பரிய பூக்களிலிருந்து மாறி ஏற்றுமதி நோக்கங்களுக்கான கொய் மலர்களாக மாறின.
தமிழகத்தில் அதிக அளவில் கொய் மலர் உற்பத்தி செய்து வரும் ஒசூரில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமைக்குடில் அமைத்து மலர் சாகுபடி செய்யப்படுகிறது.
மத்திய அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்டு நீர் பானசத்திற்கு 100% மானியம் வழங்கியது. பசுமைக்குடில் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கியது.
ஒசூர் கொய்மலர் விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக லாபகரமாக தொழில் செய்து வந்தனர். விவசாயிகள் பூக்களைத் தக்க நேரத்தில் கொய்து, அதனை குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு வாரம் பதப்படுத்தி வைத்து, பின்னர் முறையாக பேக்கிங் செய்து குளிரூட்டப்பட்ட லாரிகளில் பெங்களூரு விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.
ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, போலந்து, மலேசியா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் அரபு நாடுகளுக்கு கொய் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. 2019-20 ஆண்டில் நமது மொத்த மலர் ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு மட்டும் 25.67 சதவீதம் ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2015-16ஆம் ஆண்டு 22,692 டன் மலர்கள், 2016-17இல் 20,020 டன், 2017-18இல் 20,703 டன், 2018- 19இல் 19,727 டன், 2019- 2020இல் 14,385 டன் மலர்கள் ஏற்றுமதியானது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்றைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏற்றுமதி செய்து வந்த நிலையில், தற்போது ரூ.541 கோடியாக குறைந்துவிட்டது. கடந்த நிதி ஆண்டில் முற்றிலுமாக மலர் ஏற்றுமதி நடைபெறவில்லை. விமான சேவை மூலமான ஏற்றுமதியை முழுமையாக நம்பி சாகுபடி செய்து வந்த இந்திய கொய் மலர் விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது கரோனா பெரும் தொற்று.
ஒசூர் விவசாயிகள் மட்டுமின்றி, இந்திய ரோஜா கொய்மலர் ஏற்றுமதி விவசாயிகள் அனைவருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இயக்குநரும், ஒசூர் மலர் விவசாயிகள் சங்கத் தலைவருமான பாலசிவபிரசாத்.
இது தொடர்பாக அவர் கூறியது:
ஒரு தொழிற்சாலை செயல்பாட்டை நிறுத்துவது என்றால் கதவை மூடிவிட்டு மின்சாரத்தை நிறுத்திவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால் ரோஜா போன்ற மலர்ச் செடிகளை பல மாதங்களாக நட்டு வளர்த்து, அதற்குத் தேவையான தண்ணீர், உரம் இட்டு, மருந்து தெளித்து, வளர்த்து அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் மத்திய அரசு கரோனா பொது முடக்கத்தை அறித்தது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதனால் அறுவடை செய்து ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த மலர்கள், செடியில் அறுவடைக்கு இருந்த மலர்கள் உள்பட அனைத்தும் வீணாகின. பல மாதங்களாக உழைத்து பணமாக மாற்றும் நேரத்தில் கரோனா பொதுமுடக்கம் விவசாயிகளை நிலை குலைய வைத்தது.
அதன் பிறகு கரோனா முதல் அலை குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்து வந்தனர். இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வந்துவிடலாம் என்று நினைத்து மீண்டும் ரோஜா கொய் மலர்களை வளர்த்து வந்தனர். இந்த நேரத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் கொய் மலர் தொழிலை மீண்டும் முடக்கியது. மலர் விவசாயத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் ஓராண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு ஆனது. ஏற்றுமதி தடைபட்டது மட்டுமல்லாமல், திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள், விழாக்கள் நடத்த முற்றிலும் தடை என தமிழக அரசு ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியுள்ளது.
திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களை நம்பி உள்ள மலர் உற்பத்தி விவசாயிகள் முதல் அலங்கார வளைவு போன்ற வேலைப்பாடு செய்யும் தொழிலாளி, மலர் கொத்து தயாரிக்கும் சிறு வியாபாரிகள் வரை தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்றார்.
-த.ஞானப்பிரகாசம்