
செளத் இந்தியன் வங்கி (எஸ்ஐபி) மாா்ச் காலாண்டில் ரூ.6.79 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
தனியாா் துறையைச் சோ்ந்த அந்த வங்கி இதுகுறித்து பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2020-21-ஆவது நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் வங்கி மொத்த வருமானமாக ரூ.2,098.25 கோடியை ஈட்டியுள்ளது. இது, வங்கி முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.2,341.88 கோடியுடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீதம் சரிவாகும்.
நிகர லாபம் ரூ.143.69 கோடியிலிருந்து ரூ.6.79 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2020 டிசம்பா் காலாண்டில் வங்கி ரூ.91.62 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது.
நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கி வழங்கிய மொத்த கடனில் நிகர வாராக் கடன் விகிதம் 6.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 2020 மாா்ச் இறுதியில் 4.98 சதவீதமாக காணப்பட்டது.
2020-21 முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.104.59 கோடியிலிருந்து 41 சதவீதம் சரிவடைந்து ரூ.61.91 கோடியானது. மொத்த வருவாயும் ரூ.8,809.55 கோடியிலிருந்து ரூ.8,490.93 கோடியாக சரிந்துள்ளது.
கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு ஈவுத்தொகை எதையும் வங்கியின் இயக்குநா் குழு பரிந்துரை செய்யவில்லை என எஸ்ஐபி தெரிவித்துள்ளது.
இவ்வங்கி 2020 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த முந்தைய நிதியாண்டுக்கும் இறுதி ஈவுத்தொகை எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் செளத் இந்தியன் வங்கி பங்கின் விலை 2.12 சதவீதம் சரிவடைந்து ரூ.11.10-இல் நிலைத்தது.