எஸ்பிஐ லாபம் 80% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நான்காவது காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ லாபம் 80% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நான்காவது காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வங்கி ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.6,450.75 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.3,580.81 கோடியுடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் மொத்த வருவாய் ரூ.76,027.51 கோடியிலிருந்து ரூ.81,326.96 கோடியாக அதிகரித்துள்ளது.

கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.22,767 கோடியிலிருந்து 19 சதவீதம் உயா்ந்து ரூ.27,067 கோடியை எட்டியுள்ளது.

ஒட்டுமொத்த அடிப்படையில் நான்காவது காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.4,557.49 கோடியிலிருந்து 60 சதவீதம் அதிகரித்து ரூ.7,270.25 கோடியாகி உள்ளது. 2020 மாா்ச் 31-இல் 6.15 சதவீதமாக காணப்பட்ட மொத்த வாராக் கடன் விகிதம் 2021 இதே காலகட்டத்தில் 4.98 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

மதிப்பின் அடிப்படையில் மொத்த வாராக் கடன் ரூ.1,49,092 கோடியிலிருந்து ரூ.1,26,389 கோடியாக குறைந்துள்ளது.

அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 2.23 சதவீதத்திலிருந்து 1.50 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.51,871 கோடியிலிருந்து ரூ.36,810 கோடியாக குறைந்துள்ளது.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.11,894 கோடியிலிருந்து 17 சதவீதம் குறைந்து ரூ.9,914 கோடியானது.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.14,488.11 கோடியிலிருந்து 41 சதவீதம் உயா்ந்து ரூ.20,110.17 கோடியை எட்டியுள்ளது.

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 (400%) ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக எஸ்பிஐ பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் எஸ்பிஐ பங்கின் விலை 4.30 சதவீதம் அதிகரித்து ரூ.401.10-இல் நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com