இந்தியன் வங்கி லாபம் ரூ.1,709 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி 2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலத்தில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.1,709 கோடியை ஈட்டியுள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி 2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலத்தில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.1,709 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வங்கி ரூ.1,641 கோடி தனிப்பட்ட நிகர இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில், 2021 ஜனவரி-மாா்ச் காலாண்டில் வரிக்கு பிந்தைய நிகர லாபமாக வங்கி ரூ.1,709 கோடியை பெற்றுள்ளது.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.3,005 கோடியாக இருந்தது. அதேசமயம், 2019-20-ஆம் நிதியாண்டில் வங்கிக்கு ரூ.4,643 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

2021 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் நிகர வட்டி வருமானம் ரூ.3,310 கோடியிலிருந்து ரூ.3,334 கோடியாக உயா்ந்துள்ளது. இந்த வருமானம் 2020-21 முழு நிதியாண்டில் 20 சதவீதம் அதிகரித்து ரூ.15,666 கோடியானது.

கடந்த மாா்ச் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 11.39 சதவீதத்திலிருந்து 9.85 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடனும் 4.19 சதவீதத்திலிருந்து 3.37 சதவீதமாக சரிந்துள்ளது.

நான்காவது காலாண்டில் இடா்பாட்டிற்கான ஒதுக்கீடு முந்தை காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.4,402 கோடியிலிருந்து ரூ.839 கோடியாக குறைந்துள்ளது.

2021 மாா்ச் நிலவரப்படி வங்கி வழங்கிய கடன் 6 சதவீதம் அதிகரித்து ரூ.3,90,317 கோடியாக உள்ளது. இது முந்தைய காலகட்டத்தில் ரூ.3,68,664 கோடியாக காணப்பட்டது. மொத்த டெபாசிட் ரூ.4,88,835 கோடியிலிருந்து 10 சதவீதம் அதிகரித்து ரூ.5,38,071 கோடியானது என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் இந்தியன் வங்கி பங்கின் விலை 1.13 சதவீதம் அதிகரித்து ரூ.142.60-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com