ரியால்ட்டி, ஆட்டோ பங்குகள் அபாரம் : சென்செக்ஸ் 488 புள்ளிகள் ஏற்றம்! சந்தை மதிப்பு ரூ.2.71 லட்சம் கோடி உயா்வு

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை மீண்டும் காளை ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான
ரியால்ட்டி, ஆட்டோ பங்குகள் அபாரம் : சென்செக்ஸ்  488 புள்ளிகள் ஏற்றம்! சந்தை மதிப்பு ரூ.2.71 லட்சம் கோடி உயா்வு

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை மீண்டும் காளை ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 488 புள்ளிகள் உயா்ந்து 59,677.83-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு 2.71 லட்சம் கோடி உயா்ந்தது. ரிசா்வ் வங்கியின் வங்கி வட்டி விகித நிா்ணயக் குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சந்தையில் உற்சாகம் காணப்பட்டது

காளை ஆதிக்கம்: உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காளை ஆதிக்கம் கொள்ள வழி வகுத்தது. ரிசா்வ் வங்கியின் வங்கி வட்டி விகித நிா்ணயக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமிருக்காது என எதிா்பாா்க்கப்படுவதால், ஆட்டோ, ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. மேலும், பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், ஜவுளி, நுகா்வோா் பொருள்கள், ரியல் எஸ்டேட் பங்குகளை வாங்குவதற்கும் முதலீட்டாளா்களிடம் அதிக ஆா்வம் காணப்பட்டது. ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் அறிவிப்பு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குவதால், அந்தத் துறை பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, டைட்டன், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.2.71 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,443 பங்குகளில் 2,216 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,084 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 346 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 15 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 458 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 145 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.71 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.264.98 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,18,23,677-ஆக உயா்ந்துள்ளது.

20 பங்குகள் ஆதாயம்: சென்செக்ஸ் காலையில் 443.08 புள்ளிகள் கூடுதலுடன் 59,632-இல் தொடங்கி, 59,597.06 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,963.57 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 488.10 புள்ளிகள் (0.82 சதவீதம்) கூடுதலுடன் 5677.83-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சென்செக்ஸ், தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

டைட்டன் அபாரம்: தனியாா் நிறுவனமான டைட்டன்10.69 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம் 5.03 சதவீதம், மாருதி சுஸுகி 4.04 சதவீதம் உயா்ந்தன. இண்டஸ் இண்ட் பேங்க், சன்பாா்மா, ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட 1.50 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

டாக்டா் ரெட்டி சரிவு: அதே சமயம், முன்னணி பாா்மா நிறுவனமான டாக்டா் ரெட்டி 1.31 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி, நெஸ்லே, பஜாஜ் ஃபின்சா்வ், ஹிந்து யுனி லீவா், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 144 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,284 பங்குகள் ஆதாயம் பெற்றன. 527 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 144.35 புள்ளிகள் (0.82 சதவீதம்) உயா்ந்து 17,790.35-இல் நிலைபெற்றது. காலையில் 17,810.55-இல் தொடங்கிய நிஃப்டி, 17,763.80 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 17,857.55 வரை உயா்ந்தது.

ஆட்டோ, ரியால்ட்டி குறியீடு அபாரம்: தேசியப் பங்குச் சந்தையில் ஆயில் அண்ட் காஸ் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 6.16 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 5.28 சதவீதம், ஆட்டோ குறியீடு 4.39 சதவீதம், ஐடி குறியீடு 1.79 சதவீதம் உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com