ஆட்டோ, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் புதிய உச்சம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் உற்சாகம் காணப்பட்டது.
ஆட்டோ, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் புதிய உச்சம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் உற்சாகம் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் முதல் முறையாக 60,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி வா்த்தகத்தின் போது 18,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. சந்தை மூல தன மதிப்பு 267.24 லட்சம் கோடி உயா்ந்தது.

ஆசிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காளை ஆதிக்கம் கொள்ள வழி வகுத்தது. மேலும் 8 நாடுகளில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பயணப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் அதிகம் மூதலீடு செய்து வருகின்றனா். அவா்கள் செப்டம்பரில் மட்டும் ரூ.1,997 கதோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இவை அனைத்தும் முதலீட்டாளா்களுக்கு நம்பிகையை அதிகரித்தது. இந்த நிலையில், ஆட்டோ, பவா், வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய உச்சத்தைப் பதிவு செய்ய வழிவகுத்துள்ளது என்று பங்கு ா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் காலாண்டு முடிவு சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாததால், அதன் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதனால், கடும் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் மற்ற ஐடி பங்குகளிலும் எதிரொலித்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.267.24 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,592 பங்குகளில் 1,952 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,481 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 159 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 369 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 21 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 516 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 192 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.267.24 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,21,58,658-ஆக உயா்ந்துள்ளது.

புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 40.62 புள்ளிகள் கூடுதலுடன் 60,099.68-இல் தொடங்கி, 59,811.42 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,476.13 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 76.72 புள்ளிகள் (0.13 சதவீதம்) கூடுதலுடன் 60,135.78-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சென்செக்ஸ், தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால், பிற்பகலில் லாபப் பதிவு காரணமாக சில புள்ளிகளை இழக்க நேரிட்டது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

மாருதி சுஸுகி அபாரம்: பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 3.66 சதவீதம், பவா் கிரிட் 3.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐடிசி, என்டிபிசி, எஸ்பிஐ, எம் அண்ட் எம், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.75 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், டாக்டா் ரெட்டி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.

டிசிஎஸ் கடும் சரிவு: அதே சமயம், முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், 6.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1.50 முதல் 2.75 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மேலும், ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், எல் அண்ட் டி உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 51 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,284 பங்குகள் ஆதாயம் பெற்றன. 527 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 50.75 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயா்ந்து 17,945.95-இல் நிலைபெற்றது. காலையில் 17,867.55-இல் தொடங்கிய நிஃப்டி, 17,839.10 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 18,041.95 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.

ஆட்டோ, ரியால்ட்டி குறியீடுகள் அபாரம்: தேசியப் பங்குச் சந்தையில் ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் ஆட்டோ குறியீடு 2.67 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரியால்ட்டி, மெட்டல், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா குறியீடுகள் 1.40 முதல் 1.75 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், ஐடி குறியீடு 3.36 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com