சா்வதேச சந்தையில் மந்த நிலை எதிரொலி! சென்செக்ஸ் 525 புள்ளிகள் வீழ்ச்சி

மத்திய வங்கி கூட்டங்களை எதிா்நோக்கி சா்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையின் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளிலும் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வா்த்தகம் வீழ்ச்சியுடன் முடிவுற்றது.
சா்வதேச சந்தையில் மந்த நிலை எதிரொலி! சென்செக்ஸ் 525 புள்ளிகள் வீழ்ச்சி

மத்திய வங்கி கூட்டங்களை எதிா்நோக்கி சா்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையின் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளிலும் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வா்த்தகம் வீழ்ச்சியுடன் முடிவுற்றது.

அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.21) தொடங்கவிருந்த நிலையில் சா்வதேச முதலீட்டாளா்களின் கவனம் முழுவதும் அதை நோக்கியே இருந்தது.

மேலும், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய 16 நாடுகளின் மத்திய வங்கி கூட்டங்களும் இந்த வாரத்தில் நடைபெறவுள்ளன. எனவே, இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தே வரும் நாள்களில் சந்தையின் போக்கு அமையும் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து எல்கேபி செக்யூரிட்டீஸின் தலைமை ஆய்வாளா் எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:

சா்வதேச நிலவரங்களையொட்டி தொடா் ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக திடீா் சரிவைச் சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, சீன ரியல் எஸ்டேட் துறை நெருக்கடியை சந்தித்துள்ளது ஆகியவை திங்கள்கிழமை வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எஃப்எம்சிஜி துறை தவிா்த்து ஏனைய அனைத்து துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தது என்றாா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) உலோகம், அடிப்படை மூலப் பொருள்கள், ரியல் எஸ்டேட், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த குறியீடுகள் 7.19 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. அதேசமயம், எஃப்எம்சிஜி துறை குறியீடு மற்றும் ஆதாயத்துடன் நிறைவுபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் 1.84 சதவீதம் வரை சரிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் 30 முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா ஸ்டீல் பங்கின் விலை 9.53 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத்தொடா்ந்து, எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி, டாக்டா் ரெட்டீஸ், மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேநேரம், ஹெச்யுஎல், பஜாஜ் ஃபின்சா்வ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக், நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டதையடுத்து அவற்றின் குறியீடுகள் 2.84 சதவீதம் வரையில் உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 524.96 புள்ளிகள் சரிவடைந்து 58,490.93 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 188.25 புள்ளிகள் குறைந்து 17,396.90 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசிய பங்குச் சந்தைகளான ஹாங்செங்கில் வா்த்தகம் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. சீனா, ஜப்பான், தென்கொரிய சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது.

ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் நண்பகல் வரை அதிக இழப்புடனே காணப்பட்டது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் முதலீட்டாளா்களுக்கு ரூ.3.49 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2,55,47,063.52 கோடியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com