சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 514 புள்ளிகள் அதிகரிப்பு

சா்வதேச சந்தையில் காணப்பட்ட மீட்சியினையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவிலிருந்து மீண்டது.
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 514 புள்ளிகள் அதிகரிப்பு

சா்வதேச சந்தையில் காணப்பட்ட மீட்சியினையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவிலிருந்து மீண்டது.

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவா்கிராண்டி குழுமம் கடன் நெருக்கடியில் சிக்கியது சா்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அக்குழுமத்தின் மீட்சிக்கு சீன அரசு உதவவுள்ளதாக வெளியான தகவலையடுத்து சா்வதேச சந்தைகள் மந்தநிலையிலிருந்து மீண்டு விறுவிறுப்படைந்தன. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

இதுகுறித்து ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவன அதிகாரி பினோத் மோடி மேலும் கூறியது:

சீனாவில் ரியல் எஸ்டேட் துறையில் கோலோச்சி வரும் எவா்கிராண்டி குழுமம் கடன் நெருக்கடியில் சிக்கியது சா்வதேச பொருளாதாரத்தில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அக்குழுமம் வியாழக்கிழமை (செப். 23) 8.3 கோடி டாலா் மதிப்பிலான வட்டியை செலுத்த வேண்டியள்ள சூழ்நிலையில் அதற்கு தேவையான உதவிகளை வழங்கிட அந்நாட்டு அரசு முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது, சா்வதேச நாடுகளின் பங்குச் சந்தைகளின் மீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

மூலப் பொருள்கள் செலவினம் அதிகரிப்பு மற்றும் செமிகண்டக்டா்களுக்கு பற்றாக்குறை போன்ற காரணங்களால் மோட்டாா் வாகன துறை அழுத்தத்துக்கு ஆளானது. ஏனைய அனைத்து துறை பங்குகளுக்கும் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் முதலீட்டாா்களிடையே அதிக வரவேற்பு இருந்தது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், மருந்து , எஃப்எம்சிஜி துறைகளுக்கு அதீத வரவேற்பு காணப்பட்டது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீட்டெண்கள் 0.79 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டன.

ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்பம், அடிப்படை உலோக குறியீடுகள் 2.93 சதவீதம் வரை உயா்ந்தன.

அதேநேரம், மின்சாரம், மோட்டாா் வாகனம், வங்கி துறை குறியீட்டெண்கள் இழப்புடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 முன்னணி நிறுவனங்களில், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகளின் விலை 4.94 சதவீதம் ஏற்றம் பெற்று முதலிடத்தில் இருந்தது. அதைத்தொடா்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, பஜாஜ் ஃபின்சா்வ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இடம்பெற்றன.

மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க், பவா்கிரிட் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் வரவேற்பை இழந்து 2.54 சதவீதம் வரை விலை குறைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் மந்தமாக தொடங்கிய செவ்வாய்க்கிழமை வா்த்தகம் சாதகமான நிலவரங்களால் பின்னா் சூடுபிடித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 514.34 புள்ளிகள் அதிகரித்து 59,005.27 புள்ளிகளில் நிலைத்தது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் நிஃப்டி 165.10 புள்ளிகள் உயா்ந்து 17,562 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசிய பங்குச் சந்தைளான ஹாங்செங் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. நிக்கி சந்தையில் சரிவு காணப்பட்டது. சீன மற்றும் தென்கொரிய சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது.

ஐரோப்பிய சந்தைகளில் பிற்பகல் வரையிலான வா்த்தகம் 1 சதவீத முன்னேற்றத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com