லாபப் பதிவால் சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து 3 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, நிதியாண்டின் கடைசி வர்த்தக தினமான வியாழக்கிழமை லாபப் பதிவால் சரிவில் முடிவடைந்தது.
லாபப் பதிவால் சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவு

புதுதில்லி: தொடர்ந்து 3 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, நிதியாண்டின் கடைசி வர்த்தக தினமான வியாழக்கிழமை லாபப் பதிவால் சரிவில் முடிவடைந்தது.  ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  115 புள்ளிகளை இழந்தது.

முதலீட்டாளர் நம்பிக்கை: ரஷியா - உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியதால், கடந்த மூன்று நாள்களாக சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில்  இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை முன்னணி நிறுவனப் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக,  இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாகக் குறைந்ததால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, புதன்கிழமை அன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,357.47  கோடி  அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

1,951 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,507 நிறுவனப் பங்குகளில் 1,951  பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தன. அதேசமயம், 1,451  பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 105  பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 130 பங்குகள் புதிய 52 வார  அதிகபட்ச விலையையும், 51  பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.  சந்தை மூலதன மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.264.06 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.43  கோடியாக உயர்ந்துள்ளது.

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 95.72  புள்ளிகள் கூடுதலுடன் 58,779.71-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,890.92 வரை உயர்ந்தது. பின்னர், 58,485.79 வரை கீழே சென்ற  சென்செக்ஸ், இறுதியில் 115.48 புள்ளிகள் (0.20 சதவீதம்) குறைந்து 58,568.51-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் காளையுடனான  கடும் போட்டியில் இறுதியில் கரடியின் கை மேலோங்கியதால், 3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ரிலையன்ஸ் சரிவு: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.  இதில், மார்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 1.46 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, விப்ரோ 1.44 சதவீதம், டாக்டர் ரெட்டீஸ் லேப் 1.04 சதவீதம் வீழ்ச்சி கண்டன. மேலும், சன்பார்மா, இன்ஃபோசிஸ், அல்ட்ரா டெக்  சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

ஹெச்யுஎல் முன்னேற்றம்: அதே சமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) 1.66 சதவீதம், எம் அண்ட் எம் 1.59 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.  மேலும், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், பார்தி ஏர்டெல், ஐடிசி, டைட்டன், நெஸ்லே, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ்  உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 814 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,114 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில்  20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 30 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.  நிஃப்டி குறியீடு 33.50 புள்ளிகள் (0.19 சதவீதம்) குறைந்து 17,464.75-இல் நிறைவடைந்தது. காலையில் 21 புள்ளிகள் கூடுதலுடன் 17,519.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,559.80 வரை உயர்ந்தது. பின்னர், 17,435.20 வரை கீழே சென்றது.

பார்மா, ஹெல்த்கேர் குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பார்மா 1.17 சதவீதம், ஹெல்த்கேர் குறியீடு 1.29 சதவீதம்  குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐடி, பிஎஸ்யு பேங்க், மெட்டல், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகளும் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.  அதே சமயம் எஃப்எம்சிஜி குறியீடு 1.20 சதவீதம் உயர்ந்தது.  மேலும், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ், பிரைவேட் பேங்க், மீடியா குறியீடுகளும் சிறிதளவு ஏற்றம் பெற்றன.

ஓராண்டில் 19% லாபம்

உள்நாட்டுச் சந்தையில் நிதியாண்டின் கடைசி நாளான வியாழக்கிழமை வர்த்தகம் ஆரவாரமின்றி அமைதியான முறையில் முடிவடைந்தாலும், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் 2021-22  நிதி ஆண்டில் சுமார் 19 சதவீதம் லாபத்தை வழங்கியுள்ளன. இதில் மெட்டல், மீடியா குறியீடுகள் 50 சதவீதத்துக்கும் மேல்  உயர்ந்துள்ளன. அதேபோல, பரந்த சந்தையில் நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப், சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீடுகளும் சுமார் 25 சதவீதம் வருமானத்தை அளித்துள்ளன. 

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ)  முதலீடுகளை அதிக அளவில் வாபஸ்  பெற்ற நிலையிலும், சந்தையில் இந்த அளவில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com