
புது தில்லி: டாடா குழுமம் இந்தியாவின் முதல் செயலியான ‘டாடா நியு’ வை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளதாவது:
டாடா குடும்பத்தின் இளைய உறுப்பினரான டாடா டிஜிட்டல், ‘டாடா நியு’ என்ற புதிய செயலியை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அற்புதமான இந்த தளத்தில், டாடாவின் பிராண்டுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் நவீன நெறிமுறைகளுடன் நமது பாரம்பரிய நுகா்வோா் அணுகுமுறையை இந்த தளத்தின் மூலம் இணைப்பது சிறந்த தருணம்.
இந்த ஒரே செயலியை பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் முதல் விமான பயண டிக்கெட்டுகள் வரை பெறலாம். அனைவருக்கும் பிடித்தமான நம்பகமான, பிக்பாஸ்கெட், க்ரோமா, ஐஹெச்சிஎல், கியூமின், ஸ்டாா்பக்ஸ், டாடா 1எம்ஜி, டாடா கிளிக், டாடா பிளே,வெஸ்ட்சைட் ஆகிய பிராண்டுகள் டாடா நியு
தளத்தில் இடம்பெற்றுள்ளன. கூடிய விரைவில், விஸ்டாரா, ஏா்இந்தியா, டைட்டன், தனிஷ்க், டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்டவையும் இணையவுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.
டாடாவின் இந்த புதிய செயலி, வால்மாா்ட், ஃபிளிப்காா்ட், அமேசானுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.