உற்சாகத்துடன் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 237 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சரிவை சந்தித்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் எண்ணான சென்செக்ஸ் 237 புள்ளிகளை இழந்தது.
உற்சாகத்துடன் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 237 புள்ளிகள் வீழ்ச்சி


புதுதில்லி: பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சரிவை சந்தித்தது.  நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 237 புள்ளிகளை இழந்தது. 

ஆட்டோ, வங்கிப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. அதேசமயம் எஃப்எம்சிஜி, மெட்டல், பார்மா, ஆயில் நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. உள்நாட்டில் சில்லறை பணவீக்கம்  மார்ச் மாதத்தில்  6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் அதிகபட்சமாகும். தொழிற்துறை வளர்ச்சியும் 1.7 சதவீதமாக இருந்தது.  இந்த நிலையில், காலையில் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும், நேரம் செல்லச் செல்ல பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக இறுதியில் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.  

குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம். இதனால், காலையில் பெற்ற லாபம் இறுதியில் மறைந்து போனது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

1,815 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,529 நிறுவனப் பங்குகளில் 1,815 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,589 பங்குகள் விலை குறைந்தன. 125  பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 194 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 14  பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.  சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.272.03 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.25  கோடியை தாண்டியது.

மேலும் 237 புள்ளிகள் வீழ்ச்சி:

சென்செக்ஸ் காலையில் உற்சாகத்துடன் 334.37 புள்ளிகள் கூடுதலுடன் 58,910.74}இல் தொடங்கி, அதிகபட்சமாக 59,003.82 வரை உயர்ந்தது. பின்னர்,  58,291.23 வரை கீழே சென்ற  சென்செக்ஸ், இறுதியில் 237.44 புள்ளிகள் (0.41%) குறைந்து 58,338.93}இல் நிறைவடைந்தது.  சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. 

எச்டிஎஃப்சி பங்குகள் விலை சரிவு:

30 முதல் தரப்  பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. அதேசமயம், 20 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் பிரபல தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க், வீட்டு வசதிக் கடன் அளிக்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய இரண்டும் 2 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக,  மாருதி சுஸýகி, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஏஷியன் பெயிண்ட்,  பவர் கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன. மேலும், டிசிஎஸ், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

ஐடிசி முன்னேற்றம்:

அதேசமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 1.87 சதவீதம், சன்பார்மா 1.66 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும்,  ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை 0.40 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன.

நிஃப்டி 55 புள்ளிகள் வீழ்ச்சி:

தேசிய பங்குச் சந்தையில் 466 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,473 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் இடம்பிடித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் ஆதாயம் பெற்றன. 39 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.  நிஃப்டி குறியீடு  54.65 புள்ளிகள் (0.31%)  குறைந்து 17,475.65}இல் நிறைவடைந்தது. காலையில் 69.60 புள்ளிகள் கூடுதலுடன் 17,599.90}இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,663.65 வரை உயர்ந்தது. பின்னர், 17,457.40 வரை கீழே சென்றது.

ஆட்டோ, வங்கி குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில்  நிஃப்டி ஆட்டோ, பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, மீடியா குறியீடுகள் 0.50 முதல் 0.90 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம்,  ஆயில் அண்ட் காஸ், மெட்டல், எஃப்எம்சிஜி, ஹெல்த்கேர்  குறியீடுகள் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்ந்தன.

இன்றும், நாளையும் விடுமுறை

மகாவீர் ஜெயந்தி மற்றும் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி  வியாழக்கிழமையும், புனித வெள்ளியையொட்டி வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், இந்த இரண்டு நாள்களிலும் பங்கு வர்த்தகம் நடைபெறாது என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com