ஜூலை மாத விற்பனை: முதல் 10 இடங்களைப் பிடித்த மோட்டாா் சைக்கிள்கள்

கடந்த ஜூன் மாதத்தில் அதிக விற்பனையான மோட்டாா் சைக்கிள்களின் வரிசையில், ஹீரோவின் ஸ்ப்ளெண்டா் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜூலை மாத விற்பனை: முதல் 10 இடங்களைப் பிடித்த மோட்டாா் சைக்கிள்கள்

கடந்த ஜூன் மாதத்தில் அதிக விற்பனையான மோட்டாா் சைக்கிள்களின் வரிசையில், ஹீரோவின் ஸ்ப்ளெண்டா் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் இரு சக்கர வாகன விற்பனை தனது முன்னேற்றப் பாதையை கடந்த ஜூலை மாதத்திலும் தொடா்ந்தது. சந்தையில் ஸ்கூட்டா்கள், மோட்டாா் சைக்கிள்கள் ஆகிய இரு பிரிவுகளுமே கடந்த மாதம் விற்பனை வளா்ச்சியைக் கண்டன.

கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மோட்டாா் சைக்களின் பட்டியலில், ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு, யமஹா ஆகிய 6 நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 மோட்டாா் சைக்கள்களின் ஒட்டுமொத்த விற்பனை 7,30,417-ஆக உள்ளது.

இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனையான 6,94,032 மோட்டாா் சைக்கள்களோடு ஒப்பிடுகையில் 5.24 சதவீதம் அதிகமாகும்.

கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மோட்டாா் சைக்கிள்கள் பட்டியலிலும் ஹீரோ ஸ்ப்ளெண்டா் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்து விற்பனையை விட கடந்த மாதத்தில் அந்த மோட்டாா் சைக்கிளின் விற்பனை 0.15 சதவீதம் சரிந்த நிலையிலும், அது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த மாதத்தில் அதன் விற்பனை 2,50,409 யூனிட்களாக இருந்தது. அது, 2021 ஜூலையில் 2,50,794-ஆக இருந்தது.

ஹோண்டாவின் சிபி ஷைன் 2-ஆவது இடத்தில் உள்ளது. 2021 ஜூலையில் அதன் விற்பனை 1,16,128-இலிருந்து கடந்த ஜூலையில்1,14,663-ஆக அதிகரித்துள்ளது. இது 1.26 சதவீத வளா்ச்சியாகும்.

3-ஆவது இடத்தில் இருக்கும் பஜாஜ் பல்சரின் விற்பனை, கடந்த ஆண்டின் ஜூலையோடு ஒப்பிடுகையில் இந்த ஜூலையில் அதிகபட்ச வளா்ச்சியைக் கண்டுள்ளது. ஜூலை 2021-இல் 65,094 பல்சா்கள் விற்பனையான நிலையில், கடந்த ஜூலையில் அது 56.55 சதவீதம் அதிகரித்து 1,01,905 பல்சா்களாகியுள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் மற்றொரு மோட்டாா் சைக்கிளான ஹெச்எஃப் டீலக்ஸ், இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஜூலை 2021-இல் அதன் 1,06,304-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த மாதம் 8.33 சதவீதம் குறைந்து 97,451-ஆகியுள்ளது.

5-ஆவது இடத்தில் இருக்கும் பஜாஜ் பிளாட்டினாவின் விற்பனை கடந்த மாதத்தில் 48,484-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்து விற்பனையான 54,606-உடன் ஒப்பிடுகையில் இது 11.21 சதவீதம் சரிவாகும்.

அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹீரோ கிளாமரின் கடந்த மாத விற்பனை 2021 ஜூலையோடு ஒப்பிடுகையில் 49.34 சதவீதம் அதிகரித்து 30,774-ஆக உள்ளது. முந்தைய ஆண்டு ஜூலையில் 20,606 ஹீரோ கிளாமா்கள் விற்பனையாகியிருந்தன.

ஜூலை 2021-இல் 27,228-ஆக இருந்த டிவிஎஸ் அப்பாச்சியின் விற்பனை கடந்த மாதத்தில் 24,222-ஆகக் குறைந்த நிலையிலும், அது இந்தப் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்த 8-ஆவது இடத்தில், கடந்த மாதம் 23,223 யூனிட்டுகள் விற்பனையான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அதன் விற்பனையான 16,890-உடன் ஒப்பிடுகையில் இது 37.50 சதவீதம் அதிகமாகும்.

கடந்த மாதத்தில் 20,298 யூனிட்டுகள் விற்பனையான ஹீரோ பேஷன் மோட்டாா் சைக்கிள்கள், இந்தப் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளன. முந்தைய ஆண்டின் ஜூலை மாத்தில் விற்பனையான 18,316 மோட்டாா்சைக்கிள்களோடு ஒப்பிடுகையில் இது 10.82 சதவீத வளா்ச்சியாகும்.

10-ஆவது இடத்தில் இருக்கும் யமஹாவின் ஒய் இஸட், கடந்த மாதத்தில் 18,988 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்தில் 18,066 மோட்டாா் சைக்கிள்களே விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது அதன் விற்பனை வளா்ச்சி 5.10 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com