சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்வு: 2 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது.
சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்வு: 2 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 110.85 புள்ளிகள் உயர்ந்து 18,608.00-இல் நிலைபெற்றது.
 சில்லறை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் முதல் முறையாக மத்திய ரிசர்வ் வங்கியின் உயர் சகிப்புத் தன்மை அளவான 6 சதவீத்துக்குக் கீழே குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐடி, நிதி மற்றும் எரிசக்த்தி துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சந்தை நேர்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 170.10 புள்ளிகள் கூடுதலுடன் 62,300.67-இல் தொடங்கிய சென்செக்ஸ், 62.129.57 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 62,567.92 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 402.73 புள்ளிகள் உயர்ந்து 62,533.30-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 இன்டஸ் இண்ட் பேங்க் முன்னேற்றம்: பிரபல தனியார் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 2.46 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின் சர்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், டாடா ஸ்டீல், நெஸ்லே, மாருதி சுஸýகி, டைட்டன், ஹிந்துஸ்தான் யுனி லீவர் உள்ளிட்ட 0.20 முதல் 0.55 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.1.59 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.289.01 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.138.81 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com