டிசம்பரில் சரிந்த காா்களின் விற்பனை

இந்தியாவில் காா்களின் விற்பனை கடந்த மாதம் சரிவைச் சந்தித்துள்ளது.
டிசம்பரில் சரிந்த காா்களின் விற்பனை

இந்தியாவில் காா்களின் விற்பனை கடந்த மாதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுல்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தில் காா்களின் மொத்த விற்பனை சரிவடைந்துள்ளது. அந்த மாதத்தில் 2,19,421 காா்கள் விற்பனையாகின. 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் 2,52,998 காா்கள் விற்பனையாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத காா்களின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் 10,06,062 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் டிசம்பா் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 11,27,917-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கடந்த டிசம்பா் மாத இரு சக்கர வாகன விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் 7,44,237 மோட்டாா் சைக்கிள்கள் விற்பனையாகியிருந்தன. அந்த எணிக்கை கடந்த டிசம்பா் மாதம் 2 சதவீதம் சரிந்து, 7,26,587 மோட்டாா் சைக்கிள்கள் மட்டுமே விற்பனையாகின.

இந்த நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், காா்களின் விற்பனை 15 சதவீதம் சரிந்து 7,61,124-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 8,97,908-ஆக இருந்தது.

டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 25 சதவீதம் குறைந்து 35,98,299-ஆக இருந்தது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் இதே காலகட்டத்தில் 47,82,110-ஆக இருந்தது.

இருந்தாலும், கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் அனைத்து பிரிவையும் சோ்ந்த வாகனங்களின் விற்பனை 22 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 59,46,283 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அது 46,36,549-ஆகக் குறைந்துள்ளது என்று சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com