6 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: 554 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை திடீர் சரிவைச் சந்தித்தது. ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்திருந்த நிலையில்,
6 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: 554 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை திடீர் சரிவைச் சந்தித்தது. ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான
 சென்செக்ஸ் 554 புள்ளிகளை இழந்து 60,754-இல் நிலைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 6 நாள்களாக தொடர்ந்த ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.3.78 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தனர்.
 உள்நாட்டுச் சந்தை காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. இந்த நிலையில், உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்திருந்தது. குறிப்பாக ஐரோப்பா, ஆசிய சந்தைகள் சரிவை சந்தித்து வந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் பிற்பகலில் எதிரொலித்தது. குறிப்பாக ஆட்டோ, ரியால்ட்டி, மெட்டல் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர் கொண்டன. பிற்பகல்
 வர்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 812 புள்ளிகள் உயர்ந்திருந்தது. ஆனால், பங்குகள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக இறுதியில் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.3.78 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,513 பங்குகளில் 2,285 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,145 பங்குகள் ஆதாயம் பெற்றன. 83 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 465 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 7 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 423 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 320 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.78 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.276.24 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9.39 கோடியாக உயர்ந்தது.
 சென்செக்ஸ் திடீர் சரிவு: காலையில் சென்செக்ஸ் உற்சாகத்துடன் 121.86 புள்ளிகள் கூடுதலுடன் 61,430.77-இல் தொடங்கி, 61,475.15 வரை உயர்ந்தது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தின் போது பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 60,662.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 554.05 புள்ளிகள் (0.90 சதவீதம்) குறைந்து 60,754.86-இல் நிலைபெற்றது. தொடர்ந்து 6 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் திடீர் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.
 ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்:
 முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 1.80 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், டைட்டன், நெஸ்லே உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
 மாருதி சுஸுகி கடும் சரிவு: அதேசமயம், கடந்த 3 தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த மாருதி சுஸுகி 4.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. அதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 3 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. டாடா ஸ்டீல், இன்டஸ்இண்ட் பேங்க், எல் அண்ட் டி, விப்ரோ, ஐடிசி உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் சரிவைச் சந்தித்தன. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 195 புள்ளிகள் வீழ்ச்சி: தேசியப் பங்குச் சந்தையில் 414 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,495 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 43 பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஐஓசி மட்டும் மாற்றமின்றி ரூ.123.75-இல் நிலைபெற்றது. நிஃப்டி குறியீடு 195.05 புள்ளிகள் (1.07 சதவீதம்) குறைந்து 18,113.05- இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 29 புள்ளிகள் கூடுதலுடன் 18,337.20-இல் தொடங்கி, அதிகபட்சமாக 18,350.95 வரை உயர்ந்தது. பின்னர், பிற்பகலில் 18,085.90 வரை கீழே சென்றது.
 அனைத்துக் குறியீடுகளும் சரிவு: தேசியப் பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் ரியால்ட்டி 2.61 சதவீதம், மெட்டல் 2.26 சதவீதம், ஆட்டோ 2.38 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐடி, எஃப்எம்சிஜி, மீடியா, பார்மா, ஹெல்த்கேர், பிஎஸ்யு பேங்க், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com