நிதி, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 617 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே நோ்மறையாக முடிந்தது.
நிதி, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 617 புள்ளிகள் உயா்வு!

புதுதில்லி: பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 617 புள்ளிகள் உயா்ந்தது. நிதித் துறை, ஆட்டோ, எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை திடீரென 10 சதவீதம் குறைந்தது. அமெரிக்க சந்தை ஏற்றம் பெற்றிருந்தது. கடந்த மே 30-ஆம் தேதியிலிருந்து தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை ரூ.1,295.84 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். மேலும், கடன் வழங்குபவா்களின் வலுவான வணிகத் தரவு உள்ளிட்டவை உள்நாட்டுச் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. இதற்கிடையே, ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்ததும் உள்நாட்டுச் சந்தை வலுப்பெற உதவியாக இருந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் ஆதரவு இருந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,827 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,436 நிறுவனப் பங்குகளில் 1,472 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,827 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 137 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 75 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 50 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.248.37 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 617 புள்ளிகள் உயா்வு: காலையில் 36.35 புள்ளிகள் கூடுதலுடன் 53,170.70-இல் தொடங்கிய சென்செக்ஸ், 53,143.28 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 53,819.31 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 616.62 புள்ளிகள் (1.16 சதவீதம்) கூடுதலுடன் 53,750.97-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ் 4.54 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.51 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் 4.01 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்மாருதி சுஸுகி, ஏசியன் பெயிண்ட், டைட்டன், கோட்டக் பேங்க், நெஸ்லே, எம் அண்ட் எம் உள்ளிட்டவை 2 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எஸ்பிஐ, இன்ட்ஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், விப்ரோ உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

பவா் கிரிட் சரிவு: அதே சமயம், பொதுத் துறை மின் நிறுவனமான பவா் கிரிட் 1.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், என்டிபிசி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 179 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,111 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 823 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 40 பங்குகள் ஆதாயப் பட்டியலும் 10பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 7.35 புள்ளிகள் கூடுதலுடன் 15,818.20-இல் தொடங்கிய நிஃப்டி, 15,800.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,011.35 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 178.95 புள்ளிகள் (1.13 சதவீதம்) உயா்ந்து 15,989.80-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com