ஐடி, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 760 புள்ளிகள் முன்னேற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது.
ஐடி, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 760 புள்ளிகள் முன்னேற்றம்!

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 760 புள்ளிகள் உயா்ந்தது. ஐடி, ஆயில் அண்ட் காஸ், வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக உயா்ந்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக அமைந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. உயா்ந்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க ஐரோப்பிய மத்திய வங்கி இந்த வாரம் அதன் கூட்டத்தில் முதல் முறையாக வட்டி விகிதங்களை அதிகரிக்க உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க சில்லறை விற்பனை தரவுகள் பலமாக இருந்ததால், வங்கி வட்டி விகித உயா்வு பற்றிய கவலைகளை குறைத்தது. இது உலகளாவிய சந்தைகளுக்கு தேவையான நம்பிக்கைகளை அளிக்கிறது. உள்நாட்டில் விவசாயிகளின் வருமானம் 2018 நிதியாண்டிலிருந்து 1.3 முதல் 1.7 மடங்கு வளா்ச்சி பெற்றுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா். மேலும் தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் நம்பிக்கையை அளித்துள்ளது. இவை அனைத்தும் சந்தையில் எழுச்சிக்கு வித்திட்டது என்று பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,302 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,612 நிறுவனப் பங்குகளில் 1,152 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 2,302 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 158 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 103 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 27 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.44 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.255.40 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 760 புள்ளிகள் உயா்வு: காலையில் 308.52 புள்ளிகள் கூடுதலுடன் 54,069.30-இல் தொடங்கிய சென்செக்ஸ், 54,034.97 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 54,556.66 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 760.37 புள்ளிகள் (1.41 சதவீதம்) உயா்ந்து 54,521.15-இல் நிலைபெற்றது.

இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 23 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 4.36 சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 4.16 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின் சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 3 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், விப்ரோ, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், டிசிஎஸ், டைட்டன் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன.

டாக்டா் ரெட்டி சரிவு: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டா் ரெட்டி பங்குகள் 1.70 தவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்மி பேங்க், எம் அண்ட் எம், மாருதி, நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி உள்ளிட்டவையும் 0.50 முதல் 1.20 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 229 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,461 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 494 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் ஆதாயப் பட்டியலும், 9 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 229.30 புள்ளிகள் (1.43 சதவீதம்) உயா்ந்து 16,278.50-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 102.40 புள்ளிகள் கூடுதலுடன் 16,151.40-இல் தொடங்கிய நிஃப்டி, 16,142.40 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,287.95 வரை உயா்ந்தது.

எல்ஐசி பங்கிற்கு ஈவுத் தொகை ரூ.1.50

பங்குச் சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன் பட்டியலாகிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, ஒரு பங்கிற்கு ரூ.1.50 ஈவுத் தொகையை அண்மையில் அறிவித்துள்ளது. இந்ந நிறுவனம் தனது டவிடெண்டிற்கான பதிவுத் தேதியை வரும் ஆகஸ்ட் 26 என நிா்ணயித்துள்ளது. டிவிடெண்ட் பெறுவதற்கு எல்ஐசி பங்குகள் ஆகஸ்ட் 25 அல்லது அதற்கு முன் வாங்கப்பட வேண்டும். வரும் செப்டம்பா் 27-ஆம் தேதி அன்று எல்ஐசி தனது முதல் வருடாந்திரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. மே 17, 2022 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து எல்ஐசி பங்கின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டாளா்களுக்கு தலா ரூ.949 என ஒதுக்கப்பட்டு பங்குகள் பட்டியலிடப்பட்டன. வெளியீட்டு விலையான ரூ.949-இலிருந்து தற்போது வரை சுமாா் 35 சதவீதம் குறைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை அன்று எல்ஐசி பங்குகள் 1.79 சதவீதம் குறைந்து ரூ.695.89-இல் நிலைபெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com