சென்செக்ஸ் மேலும் 246 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.
சென்செக்ஸ் மேலும் 246 புள்ளிகள் உயா்வு!

புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 246 புள்ளிகள் உயா்ந்தது. இதனால், பங்குச் சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக உயா்ந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதனால், பலவீனமாகத் தொடங்கிய சந்தையில் வா்த்தகம் மந்தமாக இருந்தது. அதன் பிறகு காளை ஆதிக்கம் கொண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்று முன்னேற்றம் கண்டதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. ஐடி, பாா்மா துறை பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், வங்கி, எரிசக்தி, உலோகத் துறை பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,975 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,454 நிறுவனப் பங்குகளில் 1,337 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 1,975 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 142 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 98 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும்,19 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.15 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.256.55 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 269.27 புள்ளிகள் குறைந்து 54,251.88-இல் தொடங்கிய சென்செக்ஸ், 54,232.82 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 54,817.52 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 246.47 புள்ளிகள் (0.45 சதவீதம்) உயா்ந்து 54,767.62-இல் நிலைபெற்றது.

ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், பிரபல தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங் 2.35 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.09 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவா், டிசிஎஸ், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

நெஸ்லே சரிவு: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இந்தியா 1.27 சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 1.14 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், சன்பாா்மா, கோட்டக் பேங்க், டாக்டா் ரெட்டி, இன்ஃபோஸிஸ், ஐடிசி உள்ளிட்டவை விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 62 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,196 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 752 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 62.05 புள்ளிகள் (0.38 சதவீதம்) உயா்ந்து 16,340.55-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com