கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 359 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது
சென்செக்ஸ்
சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 359 புள்ளிகள் குறைந்தது.
 கச்சா எண்ணெய் விலை உயர்வு, பலவீனமான ஐரோப்பிய பங்குச்சந்தை நிலவரங்கள் ஆகியவற்றுக்கு இடையே பங்கேற்பாளர்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால், மூன்று நாள் தொடர் எழுச்சிக்குப் பிறகு சந்தை விற்பனை அழுத்தத்தில் சரிந்தன.
 மேலும், பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் வெளியாவதற்கு முன்னதாக முதலீட்டாளர்களும் எச்சரிக்கையுடன் இருந்தனர். அதே நேரத்தில், ரூபாய் மதிப்பு சரிவு முதலீட்டாளர்களின் உணர்வுகளில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 ரஷிய எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலரை தாண்டியதால், இந்தியா போன்ற அதிக கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு கூடுதல் நிதி அழுத்தம் ஏற்படும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது முதலீட்டாளர்களின் உணர்வுகளை பெரிதும் பாதித்துள்ளதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 1,741 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,477 நிறுவனப் பங்குகளில் 1,741பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
 1,612 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 124 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 73 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 55 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.257.78 லட்சம் கோடியாக இருந்தது.
 இதற்கிடையே, தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.502.08 கோடி அளவுக்குப் பங்குகளை வாங்கியுள்ளனர்.
 3 நாள் ஏற்றத்துக்கு முடிவு:
 காலையில் 303.73 புள்ளிகள் குறைந்து 55,622.01-இல் தொடங்கிய சென்செக்ஸ், 55,369.14 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 55,925.62 வரை சென்ற
 சென்செக்ஸ், இறுதியில் 359.33 புள்ளிகள் (0.64 சதவீதம்) குறைந்து 55,566.41-இல் நிலைபெற்றது. சந்தையில் நாள் முழுவதும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
 சென்செக்ஸில் 16 பங்குகள் விலை வீழ்ச்சி : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பார்மா 3.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க் 2.55 சதவீதம், எச்டிஎஃப்சி 2.50 சதவீதம் குறைந்தன. மேலும், டைட்டன், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
 எம் அண்ட் எம் முன்னேற்றம்: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 3.61 சதவீதம் மற்றும் என்டிபிசி 3.48 சதவீதம், பவர் கிரிட் 2.06 சதவீதம், டெக் மஹிந்திரா 1.46 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
 மேலும், டாடா ஸ்டீல், ஐடிசி, ஏஷியன் பெயிண்ட், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, நெஸ்லே ஆகியவை சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
 நிஃப்டி 77 புள்ளிகள் வீழ்ச்சி:
 தேசிய பங்குச் சந்தையில் 1,030 பங்குகள் ஆதாயம் பெற்றன. 905 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 82.95 புள்ளிகள் குறைந்து 16,578.45-இல் தொடங்கிய நிஃப்டி, 16,521.90 வரை கீழே சென்றது . பின்னர், அதிகபட்சமாக 16,690.75 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 76.85 புள்ளிகளை (0.46 சதவீதம்) இழந்து 16,584.55-இல் நிலைபெற்றது.
 மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் ரியால்ட்டி குறியீடு 2.01 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மீடியா, மெட்டல் குறியீடுகள் முறையே 1.54 சதவீதம் மற்றும் 1.31சதவீதம் உயர்ந்தன. ஆட்டோ, எஃப்எம்சிஜி குறியீடுகளும் சிறிதளவு ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஆயில் அண்ட் காஸ், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், பார்மா, ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

எல்ஐசி பங்குகள் 3.21  சதவீதம் சரிவு
அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலான எல்ஐசி பங்குகள் விலை செவ்வாய்க்கிழமை 3.21 சதவீதம் குறைந்து ரூ.810.85-இல் நிலைபெற்றது.   தேசிய பங்குச் சந்தையில் காலை வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.810-இல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.822 வரை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில், 3.05 சதவீதம் குறைந்து ரூ.811.50-இல் நிலைபெற்றது. பட்டியலான  தினத்திலிருந்து இதுவரை கடந்த வாரம் இரண்டு நாள்கள் மட்டுமே எல்ஐசி பங்குகள் நேர்மறையாக முடிந்தது. மற்ற நாள்கள் அனைத்திலும் எதிர்மறையாக முடிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com