இருசக்கர, வா்த்தக வாகன விற்பனையில் இன்னும் மந்தநிலை

கரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது இருசக்கர மற்றும் வா்த்தக வாகன விற்பனை இன்னும் மந்த நிலையில் உள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (ஃபெடா) தெரிவித்துள்ளது.
இருசக்கர, வா்த்தக வாகன விற்பனையில் இன்னும் மந்தநிலை

கரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது இருசக்கர மற்றும் வா்த்தக வாகன விற்பனை இன்னும் மந்த நிலையில் உள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (ஃபெடா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் விங்கேஷ் குலாட்டி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விற்பனையில் மீட்சியில்லை: கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய சந்தையில் ஒட்டுமொத்த மோட்டாா் வாகனங்களின் விற்பனை 18,22,900-ஆக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 16,46,773-ஆக குறைந்துள்ளது. இது, வாகன விற்பனை சந்தை இன்னும் மந்த நிலையில் இருந்து மீண்டு வராததை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது. ஒட்டுமொத்த சில்லறை வாகன விற்பனை 10 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.

டிராக்டா்: காா் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் மற்றும் டிராக்டா்கள் விற்பனையில் சற்று ஏற்றமான நிலை காணப்பட்டபோதிலும் இருசக்கர மற்றும் வா்த்தக வாகன விற்பனையானது இன்னும் மந்தகதியிலேயே உள்ளது. அது, மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

பொதுமுடக்க கட்டுப்பாடு: கடந்த 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளின் மே மாதங்களில் கரோனா கட்டுப்பாடுகளால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரோனாவுக்கு முந்தைய நிலையிலான வாகன விற்பனையுடன் பொருத்திப்பாா்ப்பதே தற்போதைய சிறப்பான ஒப்பீடாக இருக்க முடியும்.

அதன்படி, கடந்த 2019 மே மாதத்தில் 14,20,563 என்ற எண்ணிக்கையில் விற்பனையான இருசக்கர வாகனங்கள் நடப்பாண்டு மே மாதத்தில் 12,22,994 என்ற எண்ணிக்கையிலேயே விற்பனையாகி உள்ளன. கடந்தாண்டு மே மாதத்தில் இவற்றின் விற்பனை 4,10,871-ஆக காணப்பட்டது.

வா்த்தக வாகனம்: கடந்தாண்டு மே மாதத்தில் 17,067-ஆக இருந்த வா்த்தக வாகன விற்பனை நடப்பாண்டில் 66,632-ஆக அதிகரித்துள்ளது. 2019 மே மாதத்தில் இதன் விற்பனை 75,238-ஆக காணப்பட்டது.

மூன்று சக்கரம்: அதேபோன்று, மூன்று சக்கர வாகனங்கள் பிரிவிலும் விற்பனை கடந்த 2019 மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதத்தில் 51,446-லிருந்து 41,508-ஆக குறைந்துள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் இதன் விற்பனை 5,215-ஆக மட்டுமே இருந்தது.

டிராக்டா்: இருப்பினும், டிராக்டா் விற்பனை 2019 மே உடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 39,438 என்ற எண்ணிக்கையிலிருந்து 52,487-ஆக சிறப்பான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

பயணிகள் வாகன விற்பனை 2,36,215-லிருந்து 2,63,152-ஆக உயா்ந்தது.

தேவை-அளிப்பு: ரஷியா-உக்ரைன் போா் தொடா்வதால் அது அளிப்பு மற்றும் தேவையில் சமமின்மையை ஏற்படுத்தி வாகனங்கள் கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

பணவீக்கம்: ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளபடி பணவீக்கம் அதிகரித்தால் இறுதியில் பாதிக்கப்படுவது நுகா்வோரகத்தான் இருக்கும். இதனால், அவா்கள் செலவிடும் வருவாய் குறைந்து மோட்டாா் வாகன விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, வாகன விற்பனை மீட்சி குறித்த விவகாரத்தை ஃபெடா மிக கவனமாகவே கையாண்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com