திக்குத் தெரியாத பாதையில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 94 புள்ளிகள் குறைந்தது

திக்குத் தெரியாத நிலையில் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
திக்குத் தெரியாத பாதையில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 94 புள்ளிகள் குறைந்தது

திக்குத் தெரியாத நிலையில் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 94 புள்ளிகளை இழந்தது.
 ஆசிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தைகள் எதிர்மறையாகத் தொடங்கின. இருப்பினும், பிற்பகல் அமர்வின் போது, முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு ஒரளவு ஆதரவு கிடைத்ததால், நஷ்டம் குறைந்து நேர்மறையாக வர்த்தகம் நடந்தது. இந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 3 நாள் நிதிக் கொள்கை கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆர்பிஐயின் வங்கி வட்டி விகித நிர்ணயக் குழுவானது, வட்டி விகிதங்களில் மற்றொரு உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சந்தை எந்தப் பக்கம் செல்வது என திசை தெரியாமல் தவிப்பில் இருந்து வருகிறது.
 ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) முடிவை புதன்கிழமை அறிவிக்கவுள்ளார். இதனால், இந்த வாரம் சந்தை எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் போன்ற வட்டி விகிதத்துடன் தொடர்புடைய துறைப் பங்குகளில் தங்கள் ஈடுபாட்டை குறைத்துள்ளனர் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 2,021 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,557 நிறுவனப் பங்குகளில் 1,373 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,021 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 72 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 75 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.59 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.256.41 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வார இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று ரூ.3,770.51 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 இரண்டாவது நாளாக சரிவு:
 காலையில் 158.59 புள்ளிகள் குறைந்து 55,610.64-இல் தொடங்கிய சென்செக்ஸ், 55,295.74 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 55,832.28 வரை மேலே சென்ற
 சென்செக்ஸ், இறுதியில் 93.91 புள்ளிகளை (0.17 சதவீதம்) இழந்து 55,675.32-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 473.49 புள்ளிகளை இழந்திருந்தது. அதன் பிறகு ஓரளவு மீண்டாலும், எதிர்மறையாகவே முடிந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்தது.
 நிஃப்டி 15 புள்ளிகள் குறைவு: தேசிய பங்குச் சந்தையில் 729 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,223 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 53.60 புள்ளிகள் குறைந்து 16,530.70-இல் தொடங்கிய நிஃப்டி, 16,444.55 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 16,610.95 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 14.75 புள்ளிகள் (0.09 சதவீதம்) குறைந்து 16,569.55-இல் நிலைபெற்றது.
 ரூபாய் மதிப்பு 77.66
 ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கை முடிவு அறிவிப்பு பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதையடுத்து செலாவணி சந்தையில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. திங்கள்கிழமை நடைபெற்ற வங்கிகளுக்கு இடையிலான செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றம் எதுவுமின்றி 77.66-இல் நிலைத்தது.
 கச்சா எண்ணெய்
 பீப்பாய் 120 டாலர்
 சர்வதேச சந்தையில் திங்கள்கிழமை முன்பேர வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.60% உயர்ந்து 120.44 டாலருக்கு வர்த்தகமானதாக புள்ளிவிவரங்கள்தெரிவிக்கின்றன.
 கவலையில் எல்ஐசி முதலீட்டாளர்கள்...
 அண்மையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலான எல்ஐசி பங்குகள் தொடர்ந்து விலை சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், முக்கிய ஆதரவு நிலையான ரூ.800-ஐ திங்கள்கிழமை பிரேக் செய்தது. அதைத் தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தையில் 2.97 சதவீதம் குறைந்து வர்த்தக முடிவில் ரூ.776.50-இல் நிலைபெற்றது.
 காலையில் ரூ.800.25-இல் தொடங்கிய எல்ஐசி, அதிகபட்சமாக ரூ.801.70 வரை மட்டுமே உயர்ந்தது. பின்னர், ரூ.775.10 வரை கீழே சென்று புதிய குறைந்த விலையைப் பதிவு செய்தது. அதே போன்று, மும்பை பங்குச் சந்தையிலும் எல்ஐசியின் பங்குகள் 2.86 சதவீதம் குறைந்து வர்த்தக முடிவில் ரூ.777.40-இல் நிலைபெற்றிருந்தது. ஐபிஓ விலையான ரூ.949 உடன் கணக்கிட்டால் முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.172.50 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 மும்பை பங்குச் சந்தையில் பட்டியலான ரூ.920 விலையுடன் ஒப்பிட்டால் ரூ.142.60 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், எல்ஐசி பங்குகளில் மிகுந்த ஆர்வத்துடன் முதலீடு செய்தவர்கள் பெரும் கவலையுடன் உள்ளதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. எல்ஐசி ரூ.798-ஐ பிரேக் செய்யும் பட்சத்தில் மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணிப்பு குறித்து இதே பகுதியில் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com