568 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 568 புள்ளிகளை இழந்தது.
568 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 568 புள்ளிகளை இழந்தது.
 தள்ளாடி வரும் உலகளாவிய சந்தைகள், தொடர்ச்சியான அந்நிய முதலீடு வெளியேற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை சந்தையில் முதலீட்டாளர்களின் ஈடுபாட்டை பெரிதும் பாதித்துள்ளது.
 மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மற்றொரு உயர்வை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது. அந்த எதிர்பார்ப்பு சந்தையில் முதலீட்டாளர்களை ஒதிங்கியிருக்க வைத்துள்ளது.
 புதன்கிழமை வெளியாகவுள்ள நிதிக் கொள்கை அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு தவிர, வளர்ச்சி மற்றும் பணவீக்க முன்னறிவிப்பு குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 2,052 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,418 நிறுவனப் பங்குகளில் 1,250 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,052 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன.
 116 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 62 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 70 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு
 செய்தன.
 மூன்றாவது நாளாக சரிவு:
 காலையில் 302.12 புள்ளிகள் குறைந்து 55,373.18-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 55,387.77 வரை உயர்ந்தது. பின்னர், 54,882.41 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 567.98 புள்ளிகளை (1.02 சதவீதம்) இழந்து 55,107.34-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 792.91 புள்ளிகளை இழந்திருந்தது. வர்த்தகம் முடிவுறும் தறுவாயில் சென்செக்ஸ் ஓரளவு மீண்டாலும், எதிர்மறையாகவே முடிந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்தது.
 நிஃப்டி 153 புள்ளிகள் குறைவு: தேசிய பங்குச் சந்தையில் 616 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,311 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி "50' பட்டியலில் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 36 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம்பெற்றன. காலையில் 99.95 புள்ளிகள் குறைந்து 16,469.60-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,487.25 வரை மட்டுமே உயர்ந்தது. பின்னர் 16,347.10 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 153.20புள்ளிகள் (0.92 சதவீதம்) குறைந்து 16,416.35-இல் நிலைபெற்றது.
 ரூ.2 லட்சம் கோடி இழப்பு
 பங்குச் சந்தையில் லாப நோக்கிலான விற்பனையால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2,08,291.75 கோடி குறைந்து ரூ.2,54,33,013.63 கோடியானது. இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆட்டோ, ஆயில் அண்ட் காஸ் குறியீடு மட்டும் உயர்வு
 தேசிய பங்குச் சந்தையில் ஆட்டோ குறியீடு 0.50 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 0.90 சதவீதம் உயர்ந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடு 2.26 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 1 முதல் 1.70 % வரை குறைந்தன.
 என்டிபிசி, மாருதி சுஸýகி முன்னேற்றம்
 பொதுத் துறை மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி 1.35 சதவீதம், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகி 1.27 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எம் அண்ட் எம், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், பவர் கிரிட் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன.
 டைட்டன் கடும் சரிவு
 சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், கடிகாரங்கள், தங்க நகை தயாரிப்பில் முன்னணியில் உள்ள டைட்டன் 4.48 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. அதற்கு அடுத்ததாக, டாக்டர் ரெட்டீஸ் லேப், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏஷியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை குறைந்தன.
 மேலும், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 ரூ.751-வரை சரிந்த எல்ஐசி பங்குகள்
 மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் அண்மையில் பட்டியலான எல்ஐசி பங்குகள் விலை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் கடும் சரிவைச் சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையில் காலையில் எல்ஐசி ரூ.772.90-இல் தொடங்கி அதற்கு மேல் செல்லவில்லை. பின்னர், ரூ.751.80 வரை சரிந்து புதிய குறைந்தபட்ச விலையைப் பதிவு செய்தது. அதே போன்று, மும்பை பங்குச் சந்தையில் ரூ.751 வரை சரிந்து புதிய குறைந்தபட்ச விலையைப் பதிவு செய்தது.
 தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் வர்த்தக முடிவில் எல்ஐசி பங்குகளின் விலை 3.15 சதவீதம் சரிவடைந்து ரூ.752.90-இல் நிலைபெற்றது. இந்த நிலையில், ரூ.747-ஐ பிரேக் செய்யும் பட்சத்தில் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com