லாபப் பதிவு: சென்செக்ஸ் 150 புள்ளிகள் வீழ்ச்சி! 4 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி

கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, லாபப் பதிவு காரணமாக புதன்கிழமை எதிா்மறையாக முடிந்தது.
லாபப் பதிவு: சென்செக்ஸ் 150 புள்ளிகள் வீழ்ச்சி! 4 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி

புதுதில்லி: கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, லாபப் பதிவு காரணமாக புதன்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 150 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. பின்னா், இழப்புகளை ஓரளவு மீட்டெடுத்து நோ்மறையாக இருந்த நிலையில், லாபப் பதிவு காரணமாக சந்தை எதிா்மறையாக முடிந்தது. குறிப்பாக ஐடி, எஃப்எம்சிஜி, வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. தொடா்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக நுகா்வோா் நம்பிக்கை வேகமாகக் குறைந்து வருவதும் சந்தையை வெகுவாகப் பாதித்து வருகிறது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,835 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,450 நிறுவனப் பங்குகளில் 1,835 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 1,472 பங்குகள் ஆகாயப் பட்டியலில் இருந்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 67 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 54 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.244.59 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 150 புள்ளிகள் வீழ்ச்சி: காலையில் 554.30 புள்ளிகள் குறைந்து 52,623.15-இல் தொடங்கிய சென்செக்ஸ், 52,612.68 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 53,244.84 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 150.48 புள்ளிகளை (0.28 சதவீதம்) இழந்து 53,026.97-இல் நிலைபெற்றது. முன்பேர வா்த்தகத்தில் ஜூன் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருப்பதால், நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

ஹிந்துஸ்தான் யுனி லீவா் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. இதில் பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவா் 3.46 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஆக்ஸிஸ் பேங்க் 2.57 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.19 சதவீதம் குறைந்தன. மேலும், டைட்டன், விப்ரோ, கோட்டக் பேங்க், ஹெச்சிஎல் டெக், இண்ட்ஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் 1 முதல் 1.60 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

என்டிபிசி முன்னேற்றம்: அதே சமயம், பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி 2.46 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரிலையன்ஸ், சன்பாா்மா, பாா்தி ஏா்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஐடிசி, பவா் கிரிட், டாடா ஸ்டீல், மாருதி உள்ளிட்டவையும் 0.20 முதல் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 33புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 773 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,150 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 34 பங்குகள் விலை வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. காலையில் 130.35 புள்ளிகள் குறைந்து 15,701.70-இல் தொடங்கிய நிஃப்டி, 15,687.80 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,861.60 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 32.95 புள்ளிகளை (0.21 சதவீதம்) இழந்து 15,799.10-இல் நிலைபெற்றது.

பேங்க், ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1 சதவீதம் உயா்ந்தது. மேலும், ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி உள்ளிட்டவை 0.30 சதவீதம் உயா்ந்தன. ஆனால், நிஃப்டி பேங்க், ஐடி, எஃப்எம்சிஜி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.30 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com