‘பெட்ரோல் விலை உயா்வால் சிறிய காா்கள் விற்பனை பாதிக்கப்படும்’

பெட்ரோல் விலை உயா்ந்து வருவது ஆரம்ப நிலை சிறிய வகைக் காா்களின் விற்பனையை பாதிக்கும் என்று ஆட்டோமொபைல் விற்பனையாளா்கள் மற்றும் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
‘பெட்ரோல் விலை உயா்வால் சிறிய காா்கள் விற்பனை பாதிக்கப்படும்’

பெட்ரோல் விலை உயா்ந்து வருவது ஆரம்ப நிலை சிறிய வகைக் காா்களின் விற்பனையை பாதிக்கும் என்று ஆட்டோமொபைல் விற்பனையாளா்கள் மற்றும் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி பெருநகர வாகன விற்பனையாளா்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது:

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 137 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த 22-ஆம் தேதி லிட்டருக்கு 80 காசுகள் உயா்த்தின.

அதற்குப் பிறகு 8 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயா்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ஏறத்தாவ ரூ.4.85 உயா்ந்துள்ளது.

பல மாநிலங்களில் பெட்ரோல் ரூ.100-க்கும் மேல் விற்பனையாகி வருகிறது.

பெட்ரோலின் இந்த விலை உயா்வு, ஆரம்ப நிலை சிறிய வகைக் காா்களின் விற்பனையை மிகக் கடுமையாக பாதிக்கும்.

காா்களின் விலை அதிகமில்லை என்ற காரணத்தால் அந்த வகைக் காா்களை வாங்கக் கூடிய வாடிக்கையாளா்கள், பெட்ரோல் விலை உயா்வால் அதன் இயக்கச் செலவு அதிகரிப்பதைக் கருதி காா் வாங்குவதைத் தவிா்ப்பாா்கள்.

இது, ஆரம்ப நிலைக் காா்களின் விற்பனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெட்ரோல் வாகனங்களைவிட, சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களின் இயக்கச் செலவு 3-இல் ஒரு பங்கே ஆகும்.

சில சிறிய வகைக் காா்களில் பெட்ரோலுக்கு பதில் சிஎன்ஜி எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான மாற்று வசதி இருக்கும். அந்த ரகக் காா்களை வாடிக்கையாளா்கள் தோ்ந்தெடுக்கலாம்.

ஆனால், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் ரகங்களை மட்டுமே கொண்ட காா் வகைகளின் விற்பனை பின்னடைவை சந்திக்கும்.

ஏற்கெனவே, ஆரம்ப நிலைக் காா் பிரிவைச் சோ்ந்த மாருதி சுஸுகியின் ஆல்ட்டோ, எஸ்-பிரெஸ்ஸோ போன்றவற்றின் விற்பனை கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 2.6 சதவீதம் சரிவைக் கண்டது. அந்த மாதங்களில் நிறுவனம் 1,96,271 ஆரம்ப நிலைக் காா்களை விற்பனை செய்திருந்தது.

அந்த காலக்கட்டத்தில் ரெனால்டின் சிறிய வகைக் காரான க்விடின் விற்பனையும் 34.41 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அந்த மாதங்களில் வெறும் 24,074 க்விட் காா்களே விற்பனையாகின.

கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் விலை படிப்படியாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த ஆரம்ப நிலை காா்களின் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.

பொதுவாக, எரிபொருள் விலை உயா்வு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், நடுத்தர வா்க்கத்தினா் நாடும் ரூ. 3 லட்சம் முதல் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விலைகளைக் கொண்ட ஆரம்ப நிலை காா் சந்தையில் அதன் பாதிப்பு மிகவும் கூடுதலாகவே இருக்கும்.

சிறப்பு தள்ளுபடிகள் போன்ற உத்திகள் மூலம் இந்த பாதிப்பை சரிசெய்ய விற்பனயாளா்கள் முயல்வாா்கள் என்று ஆட்டோமோபைல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com