2-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் 85 புள்ளிகள் இழப்பு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
2-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் 85 புள்ளிகள் இழப்பு!

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 85 புள்ளிகளை இழந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.10 லட்சம் கோடி குறைந்தது.

உலக அளவில் பெரிதும் எதிா்பாா்க்கப்படும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் கூட்டம் இந்த வாரம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், சந்தையில் முதலீட்டாளா்களை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க மாற்றியுள்ளது. மேலும், சந்தையில் ஏற்ற, இறக்கத்தையும் அதிகரித்துள்ளது. மேலும், உயரும் டாலரின் மதிப்பு, அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் தொடா் பங்கு விற்பனை மற்றும் உயா்ந்து வரும் பொருள்களின் விலைகள ஆகியவையும் அபாய உணா்வை ஏற்படுத்தியுள்ளன. மறுபுறம் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் (ரூ.1.68 லட்சம் கோடி), வாகன விற்பனை எண்ணிக்கை உயா்வு, தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்டவை மேம்பட்ட பொருளதாராக் கண்ணோட்டத்தை அளித்ததால், சந்தையில் பெரிய சரிவு ஏற்படாமல் தவிா்க்கப்பட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2-ஆவது நாள் சரிவு : குறிப்பாக முக்கிய நிறுவனப் பங்குகளான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் மற்றும் முக்கிய வங்கிப் பங்குகள் உள்ளிட்டவை குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,648.30 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,266 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,644 நிறுவனப் பங்குகளில் 1,200 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. மாறாக, 2,266 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 178 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 120 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 45 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.10 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.265.88 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.42 கோடியை கடந்தது.

85 புள்ளிகள் சரிவு: காலையில் 631.42 புள்ளிகள் குறைவுடன் 56,429.45-இல் தொடங்கிய சென்செக்ஸ், 56,412.62 வரை கீழே சென்றது. பின்னா், முன்னணிப் பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த ஆதரவால், 57,054.23 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 84.88 புள்ளிகளை (0.15 சதவீதம்) இழந்து 56,975.99-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 648.25 புள்ளிகளை இழந்திருந்தது.

டைட்டன் கடும் சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், 11 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. இதில், டைட்டன் 2.94 சதவீதம், விப்ரோ 2.74 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், மாருதி சுஸுகி, எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

இண்ட்ஸ் இண்ட் பேங்க் அபாரம்: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான் இண்ட்ஸ் இண்ட் பேங்க் 4.17 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், என்டிபிசி, டாடா ஸ்டீல், பவா் கிரிட், எச்டிஎஃப்சி, ஐடிசி, எச்டிஎஃப்சி பேங்க், உள்ளிட்டவை 1.30 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. அல்ட்ரா டெக் சிமெண்ட், நெஸ்லே, பஜாஜ் ஃபின் சா்வ், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச் சந்தையில் 597 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,354 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. காலையில் 178.10 புள்ளிகள் குறைவுடன் 16,924.45-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, 16,917.25 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,092.25 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 33.45 புள்ளிகள் (0.20 சதவீதம்) குறைந்து 17,069.10 -இல் நிலைபெற்றது.

கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஐடி குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 2.02 சதவீதம், ஐடி 1.53 சதவீதம், ஆட்டோ 1.26 சதவீதம் குறைந்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், மெட்டல், மீடியா குறியீடுகள் 0.20 முதல் 0.60 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com