வட்டி விகிதம் திடீர் உயர்வு: சென்செக்ஸ் 1,307 புள்ளிகள் சரிவு

யாரும் எதிர்பாராத வகையில், குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை புதன்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது.
வட்டி விகிதம் திடீர் உயர்வு: சென்செக்ஸ் 1,307 புள்ளிகள் சரிவு

யாரும் எதிர்பாராத வகையில், குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை புதன்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,307 புள்ளிகளை இழந்தது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.5.95 லட்சம் கோடி குறைந்தது.
 இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. யாரும் எதிர்பாராத இந்த திடீர் அறிவிப்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. "எல்ஐசி ஐபிஓ' தொடக்க தேதியில் வந்த இந்தத் திடீர் அறிவிப்பு, சந்தைப் பங்கேற்பாளர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 3-ஆவது நாள் சரிவு : குறிப்பாக, முக்கிய நிறுவனப் பங்குகளான ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸýகி உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே பெரும் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தது.
 இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.1,853.46 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.
 2,645 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,475 நிறுவனப் பங்குகளில் 734 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. 2,645 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 103 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 48 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.5.95 லட்சம் கோடி குறைந்து, வர்த்தக முடிவில் ரூ.259.60 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.45 கோடியை கடந்தது.
 1,307 புள்ளிகள் சரிவு: காலையில் 148.92 புள்ளிகள் கூடுதலுடன் 57,124.91-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,184.21 வரை உயர்ந்தது. பின்னர், ஆர்பிஐ வட்டி விகித உயர்வு அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, 55,501.60 புள்ளிகள் வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,306.96 புள்ளிகளை (2.29%) இழந்து 55,669.03-இல் நிலைபெற்றது. பங்கு வர்த்தகம் நாள் முழுவதும் கரடியின் பிடியில் சிக்கி தள்ளாடியது.
 பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், பவர்கிரிட், என்டிபிசி, கோட்டக் பேங்க் ஆகிய மூன்று பங்குகள் மட்டுமே சிறிதளவு உயர்ந்தன. ஏனைய 27 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலுக்கு சென்றன. இதில், பிரபல தனியார் நிதி நிறுவனங்களான பஜாஜ் ஃபைனான்ஸ் 4.29 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 4.18 சதவீதம், டைட்டன் 4.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலையில் இருந்தன. இவற்றுக்கு அடுத்ததாக, இன்டஸ்இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸýகி, ரிலையன்ஸ், ஏஷியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 2.50 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 நிஃப்டி 392 புள்ளிகள் இழப்பு: 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 45 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. காலையில் 27.50 புள்ளிகள் கூடுதலுடன் 17,096.60-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 17,132.85 வரை உயர்ந்தது. பின்னர், 16,623.95 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 391.50 புள்ளிகளை (2.29%) இழந்து 16,677.60 -இல் நிலைபெற்றது.
 அனைத்துக் குறியீடுகளும் சரிவு: தேசியப் பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் நிஃப்டி மீடியா 4.29 சதவீதம் குறைந்து அப்பட்டியலில் முன்னிலை வகித்தது. அதற்கு அடுத்ததாக, நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், ஆட்டோ, மெட்டல், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், பார்மா, ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ரியால்ட்டி குறியீடுகள் 2.50 முதல் 3.65 சதவீதம் வரை குறைந்தன.
 மேலும், நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு, சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீடு 2 சதவீதத்துக்கும் மேல் வீழச்சி அடைந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com