
venus091231
புது தில்லி: டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் 4-ஆவது காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 14 சதவீதம் சரிவடைந்து ரூ.275 கோடியானது. கடந்த 2020-21 நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ஈட்டப்பட்ட லாபம் ரூ.319 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பாண்டில் லாபம் குறைந்து போனதற்கு விற்பனையில் ஏற்பட்ட சரிவே முக்கிய காரணம்.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் ரூ.6,132 கோடியிலிருந்து ரூ.6,585 கோடியாக அதிகரித்தது.
நான்காவது காலாண்டில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை (ஏற்றுமதி உள்பட) 8.56 லட்சமாக இருந்தது. அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் வாகன விற்பனையானது 9.27 லட்சமாக இருந்தது.
2022 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2021-22 நிதியாண்டில் லாபம் ரூ.607 கோடியிலிருந்து 20 சதவீதம் அதிகரித்து ரூ.731 கோடியாகவும், வருவாய் ரூ.19,421 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.24,355 கோடியாகவும் இருந்தது. வாகன விற்பனை 8 சதவீதம் உயா்ந்து 33.10 லட்சமாக காணப்பட்டது.
கடந்த 2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.3.75 வழங்க (375%) நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.178 கோடியாக இருக்கும் என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.
நிா்வாக இயக்குநராக சுதா்சன் வேணு: டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பொறுப்புக்கு சுதா்சன் வேணு நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக டிவிஎஸ் மோட்டாா் தலைவா் ரால்ஃப் டைய்டா் செப்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.