ஏற்ற, இறக்கத்துக்கிடையே சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
ஏற்ற, இறக்கத்துக்கிடையே சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்வு


புதுதில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. இதைத் தொடர்ந்து, மூன்று நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சந்தை மூலதன மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தை வெகுவாக உயர்ந்திருந்தது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்ததால், வர்த்தகம் உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தும் பிற்பகல் வர்த்தகத்தின் போது இழக்க நேரிட்டது. முன்பேர வர்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், ஏற்ற, இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

இருப்பினும், இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதனால், 3 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள்தெரிவித்தன.

குறிப்பாக, முக்கிய நிறுவனப் பங்குகளான இன்ஃபோசிஸ், ஐடிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை கணிசமாக உயர்ந்ததே சந்தை நேர்மறையாக முடிய முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.3,288.18 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1,899 நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,461 நிறுவனப் பங்குகளில் 1,448 பங்குகள்ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. 1,899 பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. 114 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 79 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 49 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடி குறைந்து, வர்த்தக முடிவில் ரூ.259.64 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.46 கோடியை கடந்தது.

33 புள்ளிகள் உயர்வு: காலையில் 586.04 புள்ளிகள் கூடுதலுடன் 56,255.07-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 56,566.80 வரை உயர்ந்தது. பின்னர், 55,613.82 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 33.20 புள்ளிகள் (0.06%) உயர்ந்து 55,702.23-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 897.77 புள்ளிகள் உயர்ந்திருந்தது.

இன்டஸ்இண்ட் பேங்க் கடும் சரிவு:

0 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் பிரபல தனியார் வங்கியான இன்டஸ் இண்ட் பேங்க் 4.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, நெஸ்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், சன்பார்மா, ரிலையன்ஸ், பவர் கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் உள்ளிட்டவை 1 முதல் 2.70 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

டெக் மஹிந்திரா அபாரம்: அதே சமயம், டெக் மஹிந்திரா 4.07 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டாடா ஸ்டீல், கோட்டக் பேங்க், டிசிஎஸ், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 5 புள்ளிகள் உயர்வு:

தேசிய பங்குச் சந்தையில் 826 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,104 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன.

31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. காலையில் 177.15 புள்ளிகள் கூடுதலுடன் 16,854.75-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 17,945.70 வரை உயர்ந்தது. பின்னர், 16,651.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 5.05 புள்ளிகள் (0.03%) உயர்ந்து 16,682.65 -இல் நிலைபெற்றது.

ஐடி குறியீடு ஏற்றம்: தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 2.07 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, மெட்டல் குறியீடுகள் 0.60 சதவீதம் வரை உயர்ந்தன. மற்ற அனைத்துத்துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 1.62 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எஃப்எம்சிஜி, பார்மா, ஹெல்த்கேர், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0. 60 முதல் 0.80 சதவீதம் வரை
குறைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com