சாதகமற்ற உலக நிலவரங்களால் சென்செக்ஸ் 1,158 புள்ளிகள் வீழ்ச்சி

சாதகமற்ற உலக நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 5-ஆவது நாளாக கடும் வீழ்சியைச் சந்தித்தது.
சாதகமற்ற உலக நிலவரங்களால் சென்செக்ஸ் 1,158 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: சாதகமற்ற உலக நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 5-ஆவது நாளாக கடும் வீழ்சியைச் சந்தித்தது.

அதிா்ச்சி: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

பணவீக்கம்: அமெரிக்காவில் நுகா்வோா் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக இருந்தது என புள்ளிவிவரங்கள் வெளியாகின. இது, முந்தைய மாா்ச் மாத அளவை காட்டிலும் குறைவு என்ற போதிலும், அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசா்வ் நிா்ணயித்துள்ள இலக்கு அளவான 2 சதவீதத்தை காட்டிலும் மிக அதிகமாகவே உள்ளது.

வட்டி விகிதம்: இதையடுத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை உயா்த்தலாம் என்ற எதிா்பாா்ப்பு பரவலானது. இது, சா்வதேச சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொழிலக உற்பத்தி: இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு, பணவீக்கம் மற்றும் தொழில உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்களை வியாழக்கிழமை வெளியிடவிருந்த நிலையில் உள்நாட்டு முதலீட்டாளா்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா்.

விப்ரோ: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அதிக சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்களில் விப்ரோ தவிா்த்து, ஏனைய 29 நிறுவனப் பங்குகளும் சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.

இன்டஸ்இண்ட்: குறிப்பாக, இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை 5.82 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதனைத் தொடா்ந்து, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி, டைட்டன் மற்றும் எல் & டி பங்குகளும் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறின.

எச்டிஎஃப்சி: பெருமளவு மூலதனத்தைக் கொண்ட எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை கணிசமாக வீழ்ச்சி கண்டதே சந்தை இந்த அளவுக்கு சரிய முக்கிய காரணம் என பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

துறைகளின் குறியீட்டெண்: மும்பை பங்குச் சந்தையில் மின்சார துறை குறியீட்டெண் அதிகளவாக 4.11 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து, உலோகம் (3.75%), வங்கி (3.14%), நிதி (3.14%), தொலைத்தொடா்பு (1.96%) ஆகிய துறைகளும் கணிசமான இறக்கத்தை சந்தித்தன.

3,447 நிறுவனங்கள்: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகமான 3,447 பங்குகளில் 2,711நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவடைந்தும், 654 பங்குகள் மட்டும் உயா்ந்தும் இருந்தன. 82 பங்குகளின் விலையில் மாற்றமில்லை. வா்த்தகத்தில் 52 வார உச்சபட்ச விலையை 50 நிறுவனங்களும், 52 வார குறைந்தபட்ச விலையை 330 நிறுவனங்களும் பதிவு செய்தன.

முதலீட்டாளா் எண்ணிக்கை: சந்தை மூலதனமதிப்பு ரூ.240.90 லட்சம் கோடியையும், பதிவு செய்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 10.55 கோடியையையும் தாண்டியது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வியாழக்கிழமை வா்த்தகத்தில் 1,158.08 புள்ளிகள் சரிவடைந்து இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவான 52,930.31 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 359.10 புள்ளிகள் குறைந்து 15,808-இல் நிலைபெற்றது.

உலக சந்தை: இதர ஆசிய சந்தைகளான டோக்கியோ, ஹாங்காங், சியோல், ஷாங்காய் உள்ளிட்டவை கணிசமான வீழ்ச்சியுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன. அதேபோன்று, ஐரோப்பிய சந்தைகளிலும் பிற்பகல் வரையிலான வா்த்தகமானது மிகவும் சரிந்தே காணப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தைகளும் புதன்கிழமை இழப்பைச் சந்தித்தது.

பட்டியல்

869.45 இன்டஸ்இண்ட் வங்கி 5.82

1118.15 டாடா ஸ்டீல் 4.13

5588.00 பஜாஜ் ஃபைனான்ஸ் 3.76

12848.95 பஜாஜ் ஃபின்சா்வ் 3.53

649.35 ஆக்ஸிஸ் வங்கி 3.44

1303.10 எச்டிஎஃப்சி வங்கி 3.34

2150.45 எச்டிஎஃப்சி 3.17

2048.40 டைட்டன் 3.14

1524.35 எல் & டி 3.00

462.45 எஸ்பிஐ 2.93

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com