4 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து நான்கு நாள் எழுச்சிக்குப் பிறகு, பங்குச் சந்தை புதன்கிழமை எதிர்மறையாக முடிந்தது.
4 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து நான்கு நாள் எழுச்சிக்குப் பிறகு, பங்குச் சந்தை புதன்கிழமை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 215 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 62.55 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 18,082.85-இல் முடிவடைந்தது.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. ஆசியா, ஐரோப்பிய சந்தைகளும் சுணக்கம் கண்டன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்ததாக பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 215 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 35.54 புள்ளிகள் கூடுதலுடன் 61,156.89-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,209.65 வரை மேலே சென்றது. பின்னர், 60,794.39 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 215.26 புள்ளிகளை (0.35 சதவீதம்) இழந்து 60,906.09-இல் முடிவடைந்தது.
 சன்பார்மா முன்னேற்றம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 10 பங்குகள் மட்டும் ஆதாயம் பெற்றன.
 இதில் சன்பார்மா 1.81 சதவீதம், ஐடிசி 1.43 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், விப்ரோ, டாக்டர் ரெட்டி, பஜாஜ் ஃபின் சர்வ் உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 பார்தி ஏர்டெல் சரிவு: அதே சமயம், பார்தி ஏர்டெல் 3.05 சதவீதம், மாருதி 2.40 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, ஹிந்துஸ்தான யுனி லீவர், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், இண்டஸ் இண்ட் பேங், டைட்டன் உள்ளிட்டவை 1 முதல் 1.40 சதவீதம் வரை குறைந்தன.
 இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.54 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.281.60 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.2,609.94 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com