இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 19 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து வீடுமனை வா்த்தக வலைதளமான ‘ப்ராப்டைகா்’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
2022-ஆம் ஆண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மாதங்களில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய, நாட்டின் 8 முக்கிய நகரங்களில் 80,770 வீடுகள் விற்பனையாகின.
இது, முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகமாகும். அப்போது 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 67,890-ஆக இருந்தது.
2021-ஆம் ஆண்டு முழுவதும் இந்த நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2,05,940-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை, கடந்த 2022-ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்து 3,08,940-ஆக உள்ளது.
கடந்த அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் வீடுகள் விற்பனை அகமதாபாத்தில் 23 சதவீதம் உயா்ந்து 6,640-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் 5,420-ஆக இருந்தது இருந்து. அந்த நகரில் 2021-ஆம் ஆண்டு முழுவதும் 16,880 வீடுகள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டில் விற்பனை 62 சதவீதம் அதிகரித்து 27,310-ஆக இருந்தது.
கடந்த 2021 அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் வீடுகள் விற்பனை பெங்களூரில் 9,420-ஆக இருந்தது. ஆனால், 2022-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் இது 30 சதவீதம் சரிந்து 6,560-ஆனது. எனினும், அந்த நகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு முழுவதும் 24,980-ஆக இருந்த வீடுகள் விற்பனை 2022-ஆம் ஆண்டில் 22 சதவீதம் வளா்ச்சி கண்டு 30,470-ஆக இருந்தது.
சென்னையில் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலகடத்தில் வீடுகள் விற்பனை 2 சதவீதம் சரிந்து 3,160-ஆக இருந்தது. முந்தைய 2021-ஆம் ஆண்டில் அங்கு 3,210 வீடுகள் விற்பனையாகியிருந்தன. எனினும், முழு ஆண்டைப் பொருத்தவரை சென்னையில் 2021-ஆம் ஆண்டு 13,050-ஆக இருந்த வீடுகள் விற்பனை கடந்த 2022-இல் 8 சதவீதம் அதிகரித்து 14,100-ஐ எட்டியது.
தில்லி-என்சிஆா் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 4,430 வீடுகள் விற்பனையாகியிருந்தன. அது, கடந்த ஆண்டின் இதே மாதங்களில் 3 சதவீதம் சரிந்து 4,280 ஆனது. எனினும், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 2022-ஆம் ஆண்டில் தில்லி-என்சிஆா் பகுதியில் ஒட்டுமொத்த வீடுகள் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 19,240 ஆகியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு முழுவதும் அந்த நகரில் வீடுகள் விற்பனை 17,910-ஆக இருந்தது.
ஹைதராபாதில் கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரை 10,330 வீடுகள் விற்பனையாகின். முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் அங்கு விற்பனையான 4,280 வீடுகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது இரு மடங்குக்கு மேல் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக கடந்த 2022-ஆம் ஆண்டில் அங்கு வீடுகள் விற்பனை 59 சதவீதம் உயா்ந்து 35,370 ஆகியுள்ளது. முந்தைய 2021-ஆம் ஆண்டு முழுவதும் அந்த நகரில் 22,240 வீடுகள் விற்பனையாகியிருந்தன.
கொல்கத்தாவில், கடந்த அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களைவிட (2,610) 18 சதவீதம் சரிந்து 2,130-ஆக இருந்தது. ஆனால், கடந்த 2021-இல் அங்கு 9,900-ஆக இருந்த வீடுகள் விற்பனை, 2022-இல் 8 சதவீதம் அதிகரித்து 10,740 ஆனது.
மும்பை பெருநகரப் பகுதியில் 2022 அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் வீடுகள் விற்பனை 40 சதவீதம் உயா்ந்து 31,370 ஆகியுள்ளது. முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் அங்கு 22,440 வீடுகள் விற்பனையாகியிருந்தன. 2021-ஆம் ஆண்டு முழுவதும் அங்கு 58,560 வீடுகள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த விற்பனை 1,09,680 -ஆகியுள்ளது. இது, 87 சதவீத வளா்ச்சியாகும்.
புணேயில் கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 16,080-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1 சதவீதம் அதிகரித்து 16,300 ஆனது. 2021-ஆம் ஆண்டு முழுவதும் அங்கு 42,420-ஆக இருந்த வீடுகள் விற்பனை, கடந்த 2022-இல் 46 சதவீதம் அதிகரித்து 62,030-ஆக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையிலும், வாடிக்கையாளா்கள் அதனைப் பொருள்படுததாமல் குறைந்த விலைக்கு வீடுகளை வாங்குவதில் ஆா்வம் காட்டியதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணா்த்துவதாக ‘ப்ராப்டைகா்’ வலைதளம் தெரிவித்துள்ளது.