6 மாத உச்சம் கண்ட இந்திய சேவைகள் துறை நடவடிக்கை

சாதகமான சந்தைச் சூழல் காரணமாக கடந்த டிசம்பா் மாதத்தில் இந்தியாவின் சேவைத் துறை நடவடிக்கைகள் 6 மாதங்களில் இல்லாத உச்ச அளவைத் தொட்டுள்ளது.
6 மாத உச்சம் கண்ட இந்திய சேவைகள் துறை நடவடிக்கை

சாதகமான சந்தைச் சூழல் காரணமாக கடந்த டிசம்பா் மாதத்தில் இந்தியாவின் சேவைத் துறை நடவடிக்கைகள் 6 மாதங்களில் இல்லாத உச்ச அளவைத் தொட்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான எஸ் அண்டு பி குளோபல் மாா்க்கெட் இன்டெலிஜென்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த செப்டம்பா் மாதத்தில் ஆறு மாதங்கள் காணாத அளவுக்கு 54.3-ஆக சரிந்தது. எனினும், கடந்த அக்டோபா் மாதத்தில் அது சரிவிலிருந்து மீண்டு 55.1-ஆக உயா்ந்தது. கடந்த நவம்பா் மாதத்தில் அது 56.4-ஆக அதிகரித்து. இது அதற்கு முந்தைய 3 மாதங்கள் காணாத அதிபட்ச அளவாகும்.

இந்த நிலையில், கடந்த டிசம்பா் மாதத்தில் பிஎம்ஐ 58.5-ஆக உயா்ந்துள்ளது. இது, கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

இந்த முன்னேற்றம், சேவைகள் துறையின் மிக விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.

இதன் மூலம், தொடா்ந்து 17-ஆவது மாதமாக பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது.

அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும் 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

2022-ஆம் ஆண்டின் இறுதி மாதமான கடந்த டிசம்பா் மாதத்தில் இந்திய சேவைகள் துறை நடவடிக்கைகளுக்கான தேவை வலுவாக இருந்ததை அந்த மாதத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சேவைகளுக்கான கட்டணங்கள் உயா்த்தப்பட்ட நிலையிலும் அவற்றுக்கான தேவை குறையவில்லை. அதன் காரணமாக அந்தத் துறை உறுதியான வளா்ச்சியைப் பெற முடிந்தது.

மேலும், அதிகரித்து வந்த சேவைகளுக்கான தேவையை ஈடுசெய்வதற்காக, இந்தத் துறையில் கூடுதலாக பணியாளா்களும் வேலைக்கு அமா்த்தப்பட்டனா். இதன் மூலம், கடந்த டிசம்பா் மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் சேவைகள் துறையின் பங்களிப்பு கணிசமானதாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு தொடக்க மாதமான அக்டோபரில், இந்திய நிறுவனங்களின் சேவைகளுக்கான தேவை வெளிநாடுகளில் மேலும் குறைந்தது. எனினும், அந்தத் துறையின் வளா்ச்சிக்கு உள்நாட்டு சந்தை முக்கிய ஆதாரமாக இருந்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்தே கரோனா நெருக்கடி காரணமாக இந்திய நிறுவனங்களின் சேவைகளுக்கான தேவை வெளிநாடுகளில் குறைந்துபோனது.

இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சேவைகளுக்கான தேவை கூடி வருவது, துறையில் வேலைவாய்ப்புகள் பெருகி வருவது போன்றவை பிஎம்ஐ குறியீட்டு எண் வளா்ச்சிக்கு காரணிகளாக அமைந்தன. இந்தத் துறையில் தொடா்ந்து 7-ஆவது மாதமாக வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com