ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 34 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை  பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 34 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை  பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. இறுதியில்  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 34 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. ஆனால், தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 1.10 புள்ளிகள் கூடுதலுடன் 21,930.50-இல் முடிவடைந்தது. 
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் உச்சத்தில் லாபப் பதிவு வந்தது. குறிப்பாக ஐடி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்புக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.42 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.389.25 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை  ரூ. 92.52  கோடிக்கும்,  உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,096.26 கோடிக்கும் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தள்ளாட்டம்: காலையில் 362.41 புள்ளிகள் கூடுதலுடன் 72,548.50-இல் தொடங்கிய  சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,559.21 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 71,938.22 வரை கீழே சென்ற  சென்செக்ஸ், இறுதியில் 34.09  புள்ளிகள் (0.05 சதவீதம்)  குறைந்து  72,152.00-இல்  நிறைவடைந்தது.  மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,957 பங்குகளில் 2,262 பங்குகள் ஆதாயம் பெற்றன; 1,610 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 
85 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
15 பங்குகள் விலை உயர்வு:  
சென்செக்ஸ் பட்டியலில்  எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட  மொத்தம் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.  
அதே சமயம், பவர்கிரிட், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், என்டிபிசி உள்பட மொத்தம் 15 பங்குகள்  வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com