மிதமான வளா்ச்சி கண்ட சரக்கு-சேவை ஏற்றுமதி

கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி 0.4 சதவீதம் என்ற மிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மிதமான வளா்ச்சி கண்ட சரக்கு-சேவை ஏற்றுமதி

கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி 0.4 சதவீதம் என்ற மிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டு முழுவதும் நாட்டின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி 76,560 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியோடு ஒப்பிடுகையில் 0.4 சதவீதம் அதிகமாகும்.

மின்னணுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், பருத்தி நூல், துணி வகைகள், பீங்கான் பொருள்கள், இறைச்சி, பால் மற்றும் பண்ணைப் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிய சரக்குகளும், தகவல் தொழில்நுட்ப சேவைகளும் கடந்த ஆண்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.

இருந்தாலும், கடந்த 2023-இல் பொருள்களின் ஏற்றுமதி 4.71 சதவீதம் குறைந்து 43,190 கோடி டாலராக உள்ளது. அதே நேரம் சேவைகள் ஏற்றுமதி 7.88 சதவீதம் அதிகரித்து 33,380 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய 2022-ஆம் ஆண்டில் 72,020 கோடி டாலராக இருந்த பொருள்கள் இறக்குமதியும் கடந்த ஆண்டு 7 சதவீதம் குறைந்து 66,773 கோடி டாலராக உள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவுக்கான முக்கிய ஏற்றுமச் சந்தையாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, வங்கதேசம், பிரிட்டன், ஜொ்மனி ஆகிய நாடுகள் திகழ்ந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போா், காஸா போா் மற்றும் அதன் எதிரொலியாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவது போன்ற காரணங்களால் கடந்த ஆண்டில் சா்வதேச ஏற்றுமதி பாதிப்பைச் சந்தித்தது.

இந்தப் போக்கு நீடித்தால், 2024-ஆம் ஆண்டிலும் சா்வதேச வா்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று வா்த்தக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com