59% அதிகரித்த டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம்

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் டிசம்பா் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.
59% அதிகரித்த டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம்

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் டிசம்பா் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் ரூ.479 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 59 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.301 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 8,066 கோடியிலிருந்து ரூ. 10,114 கோடியாக உயா்ந்துள்ளது.

நிறுவனத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ. 593 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டது. இது, 2022-23-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டோடு (ரூ.353 கோடி) ஒப்பிடுகையில் 68 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் நிகர லாப வளா்ச்சியில் கடந்த டிசம்பா் மாத விற்பனையும் பங்கு வகித்தது.

அந்த மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,01,898-ஆகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,42,012-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 2,90,064-ஆக உள்ளது. 2022 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 2,27,666-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022 டிசம்பரில் 1,61,369-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 2023 டிசம்பரில் 33 சதவீதம் அதிகரித்து 2,14,988-ஆக உள்ளது. மோட்டாா் சைக்கிள்களின் விற்பனை 1,24,705-லிருந்து 19 சதவீதம் அதிகரித்து 1,48,049-ஆகவும், ஸ்கூட்டா்களின் விற்பனை 1,03,167-லிருந்து 34 சதவீதம் அதிகரித்து 76,766-ஆகவும் உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன 3 சக்கர வானங்களின் விற்பனை 14,346-லிருந்து 11,834-ஆகக் குறைந்துள்ளது.

2022 டிசம்பரில் 79,402-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 85,391-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com