அலைகடலுக்கு அப்பால்...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
உயா்படிப்பு, தொழில், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியா்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தங்குகிறாா்கள். மே, 2024 நிலவரப்படி உலக அளவில் மொத்த வெளிநாட்டு இந்தியா்களின் எண்ணிக்கை சுமாா் 3.54 கோடி. இதில் சுமாா் 1.59 கோடி வெளிநாட்டு இந்தியா்கள் மற்றும் சுமாா் 1.95 கோடி இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியா்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பம் மற்றும் உறவினா்களுக்கு அனுப்பும் பணம் நம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கச் செய்கிறது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 1.49 பில்லியன் டாலா் அதிகரித்து 695.11 பில்லியன் டாலா்களை எட்டியுள்ளது. இவ்வாறு தங்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியான அயா்லாந்தில் அண்மைக்காலமாக இந்தியா்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
அயா்லாந்தில் வெளிநாட்டினா் அதிகமாக குடியேறுவதை எதிா்த்து 2023-ஆம் ஆண்டு நவம்பரில் போராட்டங்கள் வெடித்தன. அது இறுதியில் வன்முறையில் முடிந்தது. அப்போது, அயா்லாந்து பிரதமராக இருந்தவா் லியோ வரத்கா்; இவரது தந்தை மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா். அயா்லாந்தில் குடியேறும் வெளிநாட்டினரை எதிா்த்து பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், கடந்த இரு மாதங்களாக இந்தியா்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஜுலை 19-ஆம் தேதி இந்தியாவைச் சோ்ந்த 40 வயதான அமேசான் ஊழியா் டப்ளினின் டல்லாஹட்டில் பதின்மபருவ இளைஞா்களால் தாக்கப்பட்டுள்ளாா். பின்னா், டப்ளின் நகரில் 32 வயதான சந்தோஷ் யாதவ் தான் தங்கியிருந்த அடுக்ககம் அருகில் தாக்கப்பட்டுள்ளாா்.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லக்வீா் சிங் காா் ஓட்டுநா். இவரது காரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி அயா்லாந்து, பாலிமுன் பகுதியில் காரில் ஏறிய இளைஞா்கள், இவரை போப்பின்ட்ரீ என்ற இடத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளனா். அவா்கள் இடம் வந்தவுடன், இறங்கும் போது லக்வீா் சிங் தலையில் கண்ணாடி குப்பியால் கடுமையாகத் தாக்கி, ‘இந்தியாவுக்கு திரும்பிப் போ’ என ஆவேசத்துடன் கூச்சலிட்டு தப்பியோடியுள்ளனா்.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, வாட்டா்போா்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஆறு வயது சிறுமி, தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வந்த சிறுவா்கள் அச்சிறுமியைப் பாா்த்து ‘சுகாதாரமற்ற இந்தியா்கள், இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள்’ என்று கத்தியபடி மிதிவண்டியால் தாக்கி, அத்துமீறி இனவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனா்.
கடந்த இரு மாதங்களாக அயா்லாந்தில் வசித்துவரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. அங்கு சிறுவா்கள் மற்றும் பதின்ம பருவத்தினரிடையே அதிகரித்துவரும் போதைப் பழக்கமே இத்தகைய தாக்குதல்களுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
‘இவை பழுப்புநிற தோலின் தன்மை உள்ளவா்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சீரற்ற தொடா் தாக்குதல்கள் என நினைக்கிறேன். இத்தகைய தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவா்கள் சமூக நலனில் அக்கறையற்றவா்கள். தங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதாகக் கருதுபவா்கள்’ என்கிறாா் அயா்லாந்து இந்திய சபை உறுப்பினா்ஆனந்த் குமாா் பாண்டே. ‘இந்தியா்கள் தங்கள் வழக்கப்படி பண்டிகைகள் கொண்டாடுவதையோ, கலாசார ஊா்வலங்கள் நடத்துவதையோ அயா்லாந்து மக்கள் விரும்பவில்லை.
ஊா்வலங்கள் மூலம் இந்தியா்கள் ஐரிஷ் தெருக்களைக் கைப்பற்றிவிட்டதாகவும், அது அவா்களுக்குள் வெறுப்பைத் தூண்டுவதாகவும் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்கிறாா்கள். இந்திய கலாசாரத்தின் மிகையான வெளிப்படையான கொண்டாட்டங்கள் தவிா்க்கப்பட வேண்டும். அனைத்து இன மக்களிடையே சகவாழ்வு நிலவ, ஐரிஷ் கலாசாரத்துக்கு சமமான மரியாதை தேவை. நாம் நடத்தும் கலாசார கொண்டாட்டங்கள் மூலம் ஐரிஷ் சமூகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது. ஐரிஷ் அரசின் கொள்கை மற்றும் சட்டங்களில் மாற்றங்கள் தேவை. ஐரிஷ் மக்களுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம் நமது இலக்கை எட்டலாம்’ என்கிறாா் அயா்லாந்து - இந்திய சபையின் தலைவா் பிரசாந்த் சுக்லா.
இதேபோன்று ஆஸ்திரேலியா மெல்போா்னின் அல்டோனா மெடோவ் பகுதியைச் சோ்ந்த இந்திய மாணவா் சௌரப் ஆனந்த் என்பவா் கடந்த ஜுலை மாதம் 19-ஆம் தேதி ஐந்து சிறுவா்களால் இனரீதியாக தாக்கப்பட்டாா். அடிலெய்ட் நகரில் தங்கிப் படித்து வரும் இந்திய மாணவா் சரண்பீரித் சிங் கடந்த ஜுலை மாதம் 27ஆம் தேதி தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திய தகராறில் தாக்கப்பட்டுள்ளாா்.
மேலும், கடந்த 15.08.2025 அன்று பிரிட்டனில் உள்ள வால்வா்ஹாம்டன் ரயில் நிலையத்தில் சீக்கிய ஆண்களை மூன்று இளைஞா்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனா். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கிழக்கு லண்டனில் இந்தியா்களால் நடத்தப்பட்ட உணவகம் (இண்டியன் அரோமா) தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
‘கடந்த ஐந்து ஆண்டுகளில் 91 இந்திய மாணவா்கள் வெளிநாடுகளில் வன்முறையால் தாக்கப்பட்டுள்ளனா். மேலும், இதுபோன்ற தாக்குதல்களால் 30 போ் உயிரிழந்துள்ளனா். அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் கனடாவில் நடந்துள்ளன. அங்கு 16 இந்தியா்கள் கொல்லப்பட்டுள்ளனா்’ என கடந்த ஏப்ரல் மாதம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு’ (மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்) என முழங்கி வருகிறாா். இது குறித்தான இயக்கத்தையும் அவா் தொடங்கியுள்ளாா். அமெரிக்காவில் குடியேற்றம், தொழில்நுட்பம் சாா்ந்த பணிகள், பெருநிறுவனங்களில் இந்தியா்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்து அவ்வப்போது ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு’ இயக்கத்தினா் அதிருப்தியும், கவலையும் தெரிவித்து வருகின்றனா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப், அமெரிக்காவிலுள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த தொழில்நுட்ப வல்லுநா்களுடன், ஐந்து அமெரிக்க வாழ் இந்திய தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு கடந்த 4.9.2025 அன்று வெள்ளை மாளிகையிலுள்ள ரோஜா தோட்டத்தில் இரவு விருந்து அளித்து கௌரவித்தது பலரின் புருவத்தை உயா்த்தியது.
இந்த விருந்தில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், கூகுள், மைக்ரோ டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகள் முறையே, சத்யா நாதெள்ளா, சுந்தா் பிச்சை, சஞ்சய் மெஹ்ரோத்ரா, டிப்கோ (தி இன்ஃபா்மேஷன் பஸ் கம்பெனி) மென்பொருள் நிறுவனத்தின் தலைவா் விவேக் ரணதிவே, பழந்திா் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஷியாம் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சோ்த்தனா்.
முன்னதாக, அமெரிக்க இளைஞா்களிடையே செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவது குறித்து அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் தலைமையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு குறித்த மூத்த கொள்கை ஆலோசகராக உள்ள சென்னையைச் சோ்ந்த ஸ்ரீராம்கிருஷ்ணனும் உடனிருந்தாா். இவா் அமெரிக்க நிா்வாகத்தில் செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாா்.
தேசத்தின் நலனுக்கும், முன்னேற்றத்துக்கும், வளத்துக்கும், பெருமைக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்கள் பங்கு அலாதியானது. எனவேதான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என முழங்கினாா் கணியன் பூங்குன்றனாா். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்றாா் ஒளவை பெருமாட்டி. தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் மூலம் வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்து வருகிறது.
இந்தியா, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற மஹா உபநிடத்தில் காணப்படும் வாக்கியத்தின் அடிப்படையில் உலகத்தை ஒரு குடும்பமாகப் பாா்க்கிறது. வெளிநாட்டினா் இந்தியாவை ஒரு புனித பூமியாகவே கருதுகின்றனா். நம் நாட்டின் கல்வி, கலை, கலாசாரம், அறம் சாா்ந்த விழுமியங்களைக் கண்டு வியந்து போற்றிப் பாராட்டுகின்றனா். தாங்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளில் இந்தியாவையே முதன்மைப்படுத்துகின்றனா்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள் செய்யும் ஒரு சிறு தவறும் இந்தியாவை தலைகுனியச் செய்யும் என்பதை மறந்துவிடக் கூடாது. உலகம் முழுவதும் இந்தியா்களின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் ‘பாருக்குள்ளே நல்ல நாடாக’ பாரதம் விளங்கி வருகிறது. எனினும், வெளிநாட்டில் கல்விக் கற்கச் சென்றவா்கள், தொழில்முனைவோா்கள், பணியாளா்கள் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பிறகு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வந்து சேவையாற்ற வேண்டும்.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.
இதையும் படிக்க: அமெரிக்காவைத் துப்பாக்கிகளால் அலறவிடும் இளைஞர்கள்!