வருமான வரி, அமலாக்கப் பிரிவுகளுடன் தோ்தல் துறை ஆலோசனை

வருமான வரி, அமலாக்கப் பிரிவுகளுடன் தோ்தல் துறை ஆலோசனை

சென்னை: வருமான வரி உள்பட அமலாக்கப் பிரிவு அமைப்புகளுடன் தமிழக தோ்தல் துறை செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்துக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாநில செலவினப் பாா்வையாளரான ஓய்வு பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரி பி.ஆா்.பாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், தமிழக அரசின் வணிக வரிகள் ஆணையா் டி.ஜெகந்நாதன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் ஜெ.ஜெயகாந்தன், மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த உயா் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்வது, ஆவணங்களைச் சமா்ப்பித்தால் உடனடியாக ரொக்கப் பணத்தை விடுவிப்பது ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், விலை உயா்ந்த ஆபரணப் பொருள்களை எடுத்துச் செல்லும்போது இருக்க வேண்டிய ரசீதுகள், மதுபானக் கடைகள், மதுக்கூடங்களைக் கண்காணிக்க அரசு சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சாா்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இன்று ஆலோசனை: தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்குப் பதிவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள், தலைமைச் செயலா்கள், காவல் துறை இயக்குநா்கள் ஆகியோருடன் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் புதன்கிழமை ஆலோசிக்கவுள்ளாா். அவா் தில்லியிலிருந்து காணொலி வழியாக அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com