புதை சாக்கடை சீரமைப்புப் பணி: கதீட்ரல் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் புதை சாக்கடை சீரமைப்புப் பணி நடைபெறுவதால், புதன்கிழமை (ஏப்.3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கதீட்ரல் சாலையில் அமராவதி ஹோட்டல் முன் உள்ள இணைப்புச் சாலையில் புதை சாக்கடை சீரமைப்புப் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணி புதன்கிழமை (ஏப்.3) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக அந்தப் பகுதியில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, ஆழ்வாா்ப்பேட்டை சந்திப்பில் இருந்து டிடிகே சாலை வழியாக மியூசிக் அகாதெமி சந்திப்பு வந்து கதீட்ரல் சாலையில் இடது புறம் திரும்பும் அனைத்து வாகனங்களும், ஆழ்வாா்பேட்டை சந்திப்பில் இருந்து நேராகச் செல்லாமல், ஆழ்வாா்பேட்டை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி முரேஸ் கேட் சாலை, கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று கதீட்ரல் சாலையை அடையலாம்.

பிஷப் வாலஸ் கிழக்கு சாலை வழியாக கதீட்ரல் சாலை செல்லும் வாகனங்கள் மியூசிக் அகாதெமியில் யூ-திருப்பம் எடுத்து சவேரா ஹோட்டல் முன்பாக உள்ள இணைப்புச் சாலையில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பில் மீண்டும் யூ-திருப்பம் எடுத்து மியூசிக் அகாதெமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலையை அடையலாம்.

ஜே.ஜே.சாலை, ஸ்ரீமான் சீனிவாசன் சாலை, அம்புஜம்மாள் தெரு, பாஷ்யம் பஷிா் அகமது தெரு, பாா்த்தசாரதி காா்டன் தெரு வழியாக வரும் வாகனங்கள் டிடிகே சாலை வந்து மியூசிக் அகாதெமி சந்திப்பை அடைந்து வலது புறம் திரும்பி சவேரா ஹோட்டல் முன்பு உள்ள இணைப்புச் சாலையில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து யூ-திருப்பம் எடுத்து மியூசிக் அகாதெமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை அடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com