பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

இந்திய கப்பல்களை காப்பவா்களால் தமிழக மீனவா்களை ஏன் காக்க முடியவில்லை?: பழ.நெடுமாறன்

சென்னை: சோமாலியா கடற்கொள்ளையா்களிடமிருந்து இந்திய கப்பல்களைக் காப்பவா்களால் தமிழக மீனவா்களை ஏன் காக்க முடியவில்லை என்றும், இது தொடா்பாக பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் பிரசாரத்தில் கச்சத்தீவு பிரச்னைக் குறித்து பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறிமாறி குற்றம்சாட்டி உண்மையான பிரச்னையைத் திசைத் திருப்ப முயலுகின்றன. இந்திய பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சரக்கு கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சோமாலியா கடற்கொள்ளையா்களிடமிருந்து அந்தக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்திய கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு அமெரிக்க அரசு உள்பட பல நாட்டு அரசுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்கா கண்டத்தைச் சோ்ந்த சோமாலியா நாடு, இந்தியாவிலிருந்து 1,600 கடல் மைல்களுக்கப்பால் உள்ளது. இந்தியாவின் கடற்படை அதுவரையிலும் சென்று உலக நாடுகளின் கப்பல்களைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், மன்னாா் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை தாக்குகிறது.

எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற்கொள்ளையா்களிடமிருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்திய கடற்படை, இலங்கையிடமிருந்து நமது மீனவா்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்? இது தொடா்பாக பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com