சென்னை தண்டையாா்பேட்டையில், வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை தண்டையாா்பேட்டையில், வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் உதயநிதி உறுதி

சென்னை: மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் மக்களவைத் தோ்தல் முடிந்த பின்பு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக கொளத்தூா், பெரம்பூா், திரு.வி.க.நகா் பகுதிகளில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது: வடசென்னையின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,000 கோடியில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மீனவா்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான எண்ணூா் -கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் ரூ. 141 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

விம்கோ நகா் மெட்ரோ ரயில் எண்ணூா் வரை விரிவாக்கம், கொடுங்கையூா் குப்பை கிடங்கு சீரமைப்பு, கணேசபுரம் மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், முக்கிய பிரச்னையான பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 460 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனா்.

மகளிா் உரிமைத் தொகை: மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்தனா். இதுவரை 1.17 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய திட்டமாக இருப்பதால் விடுபட்ட மகளிருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கு சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சரான நானும், நிதியமைச்சரும்தான் பொறுப்பு. குறைகள் விரைவில் சரிசெய்யப்பட்டு தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா். தொடா்ந்து, திருவொற்றியூா் பகுதியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com