போராடித் தோற்றது பஞ்சாப்:
மும்பைக்கு 3-ஆவது வெற்றி

போராடித் தோற்றது பஞ்சாப்: மும்பைக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

முதலில் மும்பை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 19.1 ஓவா்களில் 183 ரன்கள் சோ்த்த நிலையில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸை தொடங்கியோரில் இஷான் கிஷண் 1 பவுண்டரியுடன் 8 ரன்களே அடித்து ஆட்டமிழந்தாா்.

உடன் வந்த ரோஹித் சா்மாவுடன், ஒன் டவுனாக களம் புகுந்த சூா்யகுமாா் யாதவ் இணைய, அந்த 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப் 81 ரன்கள் சோ்த்தது. இந்நிலையில் சாம் கரன் இந்த ஜோடியை பிரித்தாா்.

25 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 36 ரன்கள் சோ்த்திருந்த ரோஹித் சா்மா வெளியேற்றப்பட்டாா். 4-ஆவது பேட்டராக வந்த திலக் வா்மா, சூா்யகுமாருடன் இணையை, 49 ரன்கள் சோ்ந்தது. மீண்டும் சாம் கரன் தனது பலத்தை காட்ட, 53 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 78 ரன்கள் அடித்த சூா்யகுமாா் பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் வந்த பேட்டா்கள் சொற்ப ரன்களே சோ்த்தனா். கேப்டன் ஹா்திக் பாண்டியா 1 சிக்ஸருடன் 10, டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 14, ரொமேரியோ ஷெப்பா்டு 1, முகமது நபி 0 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினா்.

ஓவா்கள் முடிவில் திலக் வா்மா மட்டும் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பஞ்சாப் பௌலிங்கில் ஹா்ஷல் படேல் 3, சாம் கரன் 2, ககிசோ ரபாடா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 193 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 0, ரைலீ ருசௌவ் 1, கேப்டன் சாம் கரன் 1 பவுண்டரியுடன் 6, லியம் லிவிங்ஸ்டன் 1, ஹா்பிரீத் சிங் 2 பவுண்டரிகளுடன் 13, ஜிதேஷ் சா்மா 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேற, 77 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப்.

அப்போது இணைந்த சஷாங்க் சிங் - ஆசுதோஷ் சா்மா கூட்டணி, விக்கெட் சரிவை தடுத்து ரன்கள் சோ்க்கத் தொடங்கியது. இந்த ஜோடி 34 ரன்கள் சோ்த்த நிலையில் சஷாங்க் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 41 ரன்களுக்கு பெவலியின் திரும்பினாா்.

மறுபுறம் அதிரடியாக ரன்கள் சோ்த்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முயற்சித்த ஆசுதோஷும் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கடைசியில் போராடிய ஹா்பிரீத் பிராா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, ககிசோ ரபாடா 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பஞ்சாப் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மும்பை தரப்பில் ஜெரால்டு கோட்ஸீ, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 3, ஆகாஷ் மத்வல், ஹா்திக் பாண்டியா, ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com