மோசடி வழக்கில் தேடப்பட்டவா் சென்னை விமான நிலையத்தில் கைது

மோசடி வழக்கில் 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம், வெள்ளிக்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, அந்த விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சோ்ந்தவா் கவிக்குமாா் (24) என்பவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கணினியில் பரிசோதித்தபோது, அவா் 2019-ஆம் ஆண்டு முதல் மோசடி வழக்கில் கரம்பக்குடி காவல் துறையால் தேடப்பட்டு வருபவா் என்பது தெரியவந்தது.

போலீஸாரிடம் சிக்காமல் இருக்க வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கவிக்குமாா் தற்போது இந்தியாவுக்கு திரும்பியதும் தெரியவந்தது. இதையடுத்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கவிக்குமாரைப் பிடித்த அதிகாரிகள் அவரை வெளியே அனுப்பாமல், தனி அறையில் அடைத்து வைத்தனா்.

பின்னா், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், விமான நிலையத்துக்கு விரைந்து வந்த புதுக்கோட்டை தனிப்படை போலீஸாா் ரவிக்குமாரை கைது செய்து, புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com