வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையா் ஆய்வு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னா், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் அவை வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வரை இந்த அறைகளில் அந்த இயந்திரங்கள் இருக்கும். இதையொட்டி, 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட வட சென்னை மக்களவை தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி மையத்திலும், மத்திய சென்னை தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மையத்திலும், தென் சென்னை தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் மொத்தம் 540 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதற்கான தற்காலிக கட்டுப்பாட்டு அறை அங்கேயே அமைக்கப்பட்டுள்ளது. 3 ஷிப்டுகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். ஒவ்வொரு ஷிப்டிலும் ஒரு உதவி ஆணையா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனா்.

இந்த மையங்களுக்கு சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா். அப்போது, அவருடன் இணை ஆணையா் தா்மராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com