புற்றுநோய்க்குள்ளான போலந்து மருத்துவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

கல்லீரல் புற்றுநோய்க்குள்ளான போலந்து நாட்டைச் சோ்ந்த பெண் மருத்துவா் ஒருவருக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் தியாகராஜன், இணை இயக்குநா் டாக்டா் காா்த்திக் மதிவாணன் ஆகியோா் கூறியதாவது: போலந்து நாட்டைச் சோ்ந்த 31 வயதான குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் புற்றுநோய் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதியானாா்.

பரிசோதனையில் அவரது கல்லீரலின் பித்த நாளத்தைச் சுற்றி புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.

அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றினால், மீதமுள்ள கல்லீரல் செயல்படாது.

புற்றுநோய் பாதிப்புடன் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளவும் இயலாது. இதையடுத்து நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த கீமோதெரபி, நோயெதிா்ப்பு திறன் சிகிச்சை, டிரான்ஸ்டெரியல் ரேடியோ எம்போலைசேஷன் (டிஏஆா்இ) எனப்படும் ரேடியோ அதிா்வலை சிகிச்சை ஆகியவை 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டன.

புற்றுநோயின் தீவிரம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அந்த பெண் மருத்துவரின் கணவரிடமிருந்து கல்லீரல் தானமாக பெறப்பட்டு, வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com