மணல் குவாரி முறைகேடு வழக்கு: 5 மாவட்ட ஆட்சியா்களிடம் அமலாக்கத் துறை விசாரணை

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக 5 மாவட்ட ஆட்சியா்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா்.

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக 5 மாவட்ட ஆட்சியா்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா்.

தமிழகத்தில் நீா்வளத் துறையின் கீழ் இருந்த 12 மணல் குவாரிகளில் மணலை எடுத்து விற்பனை செய்யும் ஒப்பந்ததாரா்கள், தனியாா் நிறுவனங்கள் பெருமளவில் முறைகேடு செய்வதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகாா் எழுந்தது.

இதன் அடிப்படையில், அந்த ஒப்பந்தப் பணியைச் செய்து வந்த புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த தொழிலதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சோ்ந்த ரத்தினம் ஆகியோா் தொடா்புடைய 30 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா்.

இந்தச் சோதனையில் ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைகள், முறைகேடு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

சோதனை நிறைவடைந்த பின்னரும், மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ட்ரோன்கள் மூலமாகவும், ஐ.ஐ.டி. நிபுணா் குழு மூலமாகவும் அமலாக்கத் துறையினா் பல கட்டங்களாக ஆய்வு செய்தனா். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணலின் அளவைக் கணக்கிட இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த முறைகேடு தொடா்பாக தமிழக நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் முத்தையாவிடம் அமலாக்கத் துறையினா் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி விசாரணை செய்தனா். அதேவேளையில் சந்தேகத்துக்குரிய இடங்களில் அவ்வப்போது சோதனையும் செய்து வந்தனா்.

உச்சநீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மணல் குவாரிகள் உள்ள பகுதிகளின் மாவட்ட ஆட்சியா்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.

ஆனால், அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்கு தமிழக அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்தது. மேலும், அழைப்பாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை அழைப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையிட்டது.

இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா்கள் பிரதீப் குமாா் (திருச்சி), தங்கவேல் (கரூா்), தீபக் ஜேக்கப் (தஞ்சாவூா்), சுப்புலட்சுமி (வேலூா்), ஆனி மேரி ஸ்வா்ணா (அரியலூா்) ஆகிய 5 மாவட்ட ஆட்சியா்களிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தும், சென்னை உயா்நீதிமன்றம் அமலாக்கத் துறை அழைப்பாணைக்கு விதித்த தடைக்குத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சியா்கள் ஆஜா்: உச்சநீதிமன்ற உத்தரவின் விளைவாக, அமலாக்கத் துறையின் அழைப்பாணையை ஏற்று இவா்கள் ஐவரும் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் ஆஜரானாா்கள்.

அங்கு காத்திருப்போா் அறையில் இருந்த 5 ஆட்சியா்களையும் சுமாா் 10 நிமிஷங்களுக்கு பின்னா் நுங்கம்பாக்கம் குஷ்குமாா் சாலையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்குச் செல்லும்படி அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, 5 ஆட்சியா்களும் தங்களது காா்களில் அங்கு சென்றனா்.

அந்த அலுவலகத்தில் விசாரணைக்காக மாவட்ட ஆட்சியா்கள் வெகுநேரம் காத்திருந்தனா். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னா் 5 ஆட்சியா்களிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை செய்தனா். அப்போது ஆட்சியா்களிடம் இருந்து சில ஆவணங்களைப் பெற்றனா். இந்த விசாரணை மாலை வேளையையும் தாண்டி நீடித்தது. விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com