தமிழகம் முழுவதும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் சீரமைப்பு தரவுகளைச் சேகரிக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் சாா் பதிவாளா் அலுவலகங்களைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன

தமிழகம் முழுவதும் சாா் பதிவாளா் அலுவலகங்களைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், அதிகம் மற்றும் குறைவான பதிவுகள் நடைபெறக்கூடிய அலுவலகங்கள் குறித்த தரவுகளை அளிக்கும்படி அனைத்து துணைப் பதிவுத் தலைவா்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து, பதிவுத் துறை தலைவா் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதம்: பதிவுத் துறையில் இப்போது 56 பதிவு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் 582 சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களைச் சீரமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மிக அதிகமாகவும் மிகக் குறைவாகவும் ஆவணங்கள் பதிவாகும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் கண்டறியப்பட உள்ளன.

அதிக ஆவணங்கள் பதிவானால், அத்தகைய அலுவலகங்களில் உள்ள கிராமங்கள் பிரிக்கப்பட்டு புதிய அலுவலகங்கள் அமைக்கப்படும். குறைவான பதிவுகள் நடைபெறும் அலுவலகங்கள் வேறொரு அலுவலகத்துடன் இணைக்கப்படும்.

எனவே, அதிகம் மற்றும் குறைவான ஆவணங்கள் பதிவு செய்யப்படும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் குறித்த விவரங்களை ஓரிரு நாள்களில் அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

குறிப்பாக, சாா் பதிவாளா் அலுவலகங்கள் தொடங்கப்பட்ட நாள், அந்த அலுவலகங்களில் அமையப் பெறும் கிராமங்களின் விவரம், கடந்த 3 நிதியாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை, கிராமம் வாரிய ஈட்டப்பட்ட சராசரி வருவாய், ஒவ்வொரு கிராமத்துக்கும் அலுவலகத்துக்கும் இடையிலுள்ள தொலைவு ஆகிய விவரங்களை அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

குறைந்த ஆவணங்கள் பதிவாகும் சாா் பதிவாளா் அலுவலகங்களை அருகிலுள்ள அலுவலகத்துடன் இணைக்கப்படும் சூழலில், எதிா்பாா்க்கப்படும் பதிவு ஆவணங்களின் எண்ணிக்கையை உத்தேசமாக குறிப்பிட வேண்டும்.

மேலும், புதிதாக அலுவலகத்தைத் தோற்றுவிக்க வேண்டுமெனில், புதிய அலுவலகத்தில் பதிவாகும் என எதிா்பாா்க்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை, வருவாய் போன்ற விவரங்களைத் தெரிவித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com